டெல்லி: 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குள் ஒரு பெரிய மாற்றம் நடக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சீசனில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு சாதாரண வீரராக மட்டுமே அணியில் தொடர்வார் என்று கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் மெகா ஏலத்திற்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால், அப்போது டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டது. 14 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்தது.

சொல்லப்போனால், இது ஒரு நல்ல செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இருந்தும், ஒரே சீசனில் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் ஆலோசித்து இருப்பதாக கூறப்படுகிறது. அக்சர் பட்டேலை ஒரு வீரராக மட்டுமே ஆட வைக்கலாம் எனவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கான போட்டியில் இரண்டு முக்கிய வீரர்கள் முன்னணியில் உள்ளனர். அவர்களில் முதன்மையானவர், கடந்த ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு அணிக்கு வந்த கே.எல். ராகுல். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளை வழிநடத்திய அனுபவம் அவருக்கு இருப்பதால், அவருக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவருக்கு அடுத்தபடியாக, தென் ஆப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் அக்சரின் துணை கேப்டனாக இருந்ததும், அதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்திய அனுபவமும், தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ கேப்டனாக இருந்ததும் அவருக்குப் பக்கபலமாக உள்ளது.
ஒருவேளை இந்த இரண்டு வீரர்களையும் தாண்டி யோசித்தால், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மினி ஏலத்தில் ஒரு புதிய கேப்டனை வாங்கவும் டெல்லி அணி திட்டமிடலாம். தற்போது அந்த அணியிடம் 14.76 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது. இதைப் பயன்படுத்தி, ஒரு சிறந்த கேப்டனை அணிக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.
அக்சர் படேலின் கேப்டன்சியில் என்ன குறை? அல்லது கே.எல்.ராகுல் போன்ற அனுபவமிக்க வீரரின் கீழ் அணியை வழிநடத்த டெல்லி நிர்வாகம் விரும்புகிறதா? எது எப்படியோ, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி, ஐபிஎல் வட்டாரத்தில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.