இப்படி ஃபீல்டிங் செய்தால் எப்படி.. எங்க தோல்விக்கு அதுதான் காரணம்.. ஆஃப்கான் கேப்டன் ஷாகிதி புலம்பல்
சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேட்ச்களை கோட்டவிட்டதே தங்களின் தோல்விக்கு காரணம் என்று ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய பிலிப்ஸ் 71 ரன்களும், லேதம் 68 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 36 ரன்களும், ஒமர்சாய் 27 ரன்களும் சேர்த்தனர். அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். நியூசிலாந்து அணி தரப்பில் சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் தோல்வி குறித்து கேப்டன் ஷாகிதி பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்ற கேட்ச்களை நிச்சயம் பிடிக்க வேண்டும். எங்களில் ஃபீல்டிங் மோசமாக தான் இருந்தது. அதன் காரணமாகவே களத்தில் உற்சாகமின்றி இருந்தோம். அதேபோல் கடைசி 6 ஓவர்களில் நியூசிலந்து அணி அதிக ரன்களை சேர்த்தது. 40 ஓவரின் போது இரு முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம்.
நியூசிலாந்து அணிக்காக நீண்ட நேரம் விளையாடிய இரு பேட்ஸ்மேன்களையும் வீழ்த்த முடியாமல் திணறினோம். அவர்களை வீழ்த்த எங்களின் முயற்சியும் தோல்வியடைந்தது. அதேபோல் டாஸை பொறுத்தவரை, பிட்சை 100 சதவிகிதம் யாராலும் சரியாக கணித்துவிட முடியாது. பிட்ச் ஸ்லோவாக மாறிவிட்டது. அதேபோல் நாங்கள் சிறப்பாக பந்துவீசியும், ஃபீல்டிங் பற்றி கவலையாக உள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இன்னும் அதிக போட்டிகளில் நாங்கள் இன்னும் விளையாட வேண்டியுள்ளது. எங்களுக்குள் சிறந்த ஆலோசனையை நடத்தி, சரியான திட்டத்துடன் நிச்சயம் நாங்கள் கம்பேக் கொடுப்போம் என்று தெரிவித்தார். ஆஃப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை 4 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மற்றும் 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications