விசாகப்பட்டினம்: நட்சத்திர நடிகர்கள் விளையாடி வரும் சிசிஎல் (CCL 2026) கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜனவரி 18) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியைத் தழுவிய சென்னை கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் மோதும் இந்தத் தொடர் விசாகப்பட்டினத்தில் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் விக்ராந்த் தலைமையிலான வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியும், ஜிசு சென்குப்தா தலைமையிலான பெங்கால் டைகர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டி ரசிகர்களுக்குத் திக் திக் நிமிடங்களைக் கொடுத்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்கால் டைகர்ஸ் 20 ஓவர்களில் 185 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை கிங்ஸ் அணியில் பிரித்வி பாண்டியராஜன் (59) மற்றும் விக்ராந்த் (45) அதிரடி காட்டினர். ஒரு கட்டத்தில் சென்னை வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது, பெங்கால் வீரர் ராகுல் மஜும்தார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றினார். இறுதியில் சென்னை அணியும் 185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக, ஆட்டம் 'டை' ஆனது.
வெற்றியாளரைத் தீர்மானிக்க 'சூப்பர் ஓவர்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய சென்னை 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. 8 ரன்கள் என்ற இலக்கை ராகுல் மஜும்தார் சிக்ஸர் அடித்து எளிதாகக் கடக்க, பெங்கால் டைகர்ஸ் அபார வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் சென்னை கிங்ஸ் அணி இன்னும் வெற்றிக்கணக்கைத் தொடங்கவில்லை. விளையாடிய ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால் 0 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பெங்கால் டைகர்ஸ் முதலிடத்தில் கெத்தாக உள்ளது.
பெங்கால் டைகர்ஸ்: 4 புள்ளிகள் (2 வெற்றி)
போஜ்புரி தபாங்ஸ்: 2 புள்ளிகள் (1 வெற்றி)
கர்நாடகா புல்டோசர்ஸ்: 2 புள்ளிகள் (1 வெற்றி)
கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ்: 2 புள்ளிகள் (1 வெற்றி)
தெலுங்கு வாரியர்ஸ்: 2 புள்ளிகள் (1 வெற்றி, 1 தோல்வி)
வேல்ஸ் சென்னை கிங்ஸ்: 0 புள்ளிகள் (1 தோல்வி)
மும்பை ஹீரோஸ்: 0 புள்ளிகள் (2 தோல்வி)
பஞ்சாப் டி ஷெர்: 0 புள்ளிகள் (2 தோல்வி)
ஜனவரி 24: வேல்ஸ் சென்னை கிங்ஸ் vs கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் (மாலை 6:30)
ஜனவரி 25: வேல்ஸ் சென்னை கிங்ஸ் vs மும்பை ஹீரோஸ் (மாலை 6:30)
அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.