துபாய்: 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பயணம் மேற்கொள்ளும் முன் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். தங்கள் அணி சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் ஆகத்தான் செல்கிறது என்றும், அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் தனி ஆளாக போட்டியை வென்று கொடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
வரும் பிப்ரவரி 19 அன்று 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. அந்தத் தொடரில் வங்கதேசம் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. பிப்ரவரி 20 அன்று வங்கதேச அணி இந்தியாவை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது பற்றி ஷாண்டோ பேசுகையில், "நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் ஆகத்தான் செல்கிறோம். அந்தத் தொடரில் பங்கேற்க உள்ள எட்டு அணிகளும் சாம்பியன் ஆகத் தகுதியானவை. அனைத்துமே தரமான அணிகள். எங்கள் அணிக்கும் அந்தத் திறன் இருப்பதாக நான் நம்புகிறேன். எங்கள் அணியில் யாரும் கூடுதல் அழுத்தத்தை உணர மாட்டோம்."
"நாங்கள் உண்மையாகவே சாம்பியன் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறோம். எங்கள் திறனில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அல்லா எங்கள் விதிகளில் என்ன எழுதி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் கடினமாக உழைத்து எங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்கள் இலக்கை அடைவோம்."
"எங்கள் அணியில் இருக்கும் 15 வீரர்கள் குறித்து நான் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். எங்கள் அணியில் ஆடும் ஒவ்வொரு வீரரும் தனி நபராக போட்டியை வென்று கொடுப்பார்கள். சில காலத்திற்கு முன்பு வரை எங்கள் அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது எங்கள் அணியில் வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்."
"இதற்கு முன் எங்கள் அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இல்லை. ஆனால் தற்போது ஒருவர் இருக்கிறார். தற்போது எங்கள் அணி சரி சமமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை சரியாகச் செய்தால் எந்த அணியையும் எப்போதும் எங்களால் வீழ்த்த முடியும்" என்றார் நஜ்முல் ஷாண்டோ.