Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Champions Trophy 2025: பாகிஸ்தான் செல்வது குறித்து இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவு.. பிசிசிஐ தகவல்

டெல்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்த நாட்டுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்து இருக்கிறது. இதை அடுத்து இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது உறுதியாகி இருக்கிறது.

2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட எட்டு முக்கிய நாடுகள் பங்கேற்க உள்ளன. கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை. எனவே, இந்திய அணி இப்போதும் பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது அது உறுதியாகி இருக்கிறது.

champions trophy 2025 bcci pakistan

நவம்பர் 11 அன்று சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான போட்டி அட்டவணையை இறுதி செய்ய வேண்டிய நாள் என்பதால் அதற்கு முன் பிசிசிஐ தங்களது முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பிசிசிஐ சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது வாய்மொழியாக சொல்லப்பட்டதா அல்லது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதா? என்ற தகவல் இல்லை. அதே சமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அது அதிகாரப்பூர்வமாக, எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு அளிக்க வேண்டும் என கூறி இருந்தது. எனவே, பிசிசிஐ இதை எழுத்துப்பூர்வமாக அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியா, பாகிஸ்தானுக்கு வராவிட்டாலும் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நாங்கள் நடத்த மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி சில தினங்களுக்கு முன்பு பேசி இருந்தார். பாகிஸ்தானில் நடந்த 2023 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வராதபோதும், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற 2023 ஒருநாள் கோப்பை உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இப்போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அதன் பின் பாகிஸ்தான் அணியும் இந்தியாவுக்கு வராது என சூசகமாக சுட்டிக்காட்டி இருந்தார். இந்த நிலையில் தான் பிசிசிஐ பாகிஸ்தானுக்கு செல்லப் போவதில்லை என்ற முடிவை கூறி இருக்கிறது. தற்போது சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் என்றால் இந்திய அணி ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துவதை தவிர வேறு வழி இல்லை.

சில மாதங்களாகவே இந்த இந்திய அணி வர மறுத்தால் என்ன செய்வது? என்பது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இந்தியா ஆடும் போட்டிகளை நடத்த முதற்கட்டமாக முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டாவதாக இலங்கையும் இந்த திட்டத்தில் உள்ளது. எனினும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த ஒப்புக் கொள்ளுமா? ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்துமா? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

Story first published: Saturday, November 9, 2024, 18:47 [IST]
Other articles published on Nov 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+