துபாய்: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா? இல்லையா? என்பது பற்றி இன்று நடக்கும் ஐசிசி கூட்டத்தில் முடிவு எட்டப்பட உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பிசிசிஐ இந்த கூட்டத்தில் பங்கு பெற்று நேருக்கு நேர் பேச உள்ளன.
பாகிஸ்தான் நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ முன்னதாக கூறி இருந்தது. இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அனுப்ப அனுமதிக்க முடியாது என இந்திய அரசு கூறி விட்டதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக பிசிசிஐ கூறி இருந்தது.

அதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தது பிசிசிஐ. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்திய அணிக்காக 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் மாற்றம் செய்ய மறுத்து உள்ளது. அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானிலேயே நடத்த வேண்டும் என கூறி இருக்கிறது.
மேலும், இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் இனி பாகிஸ்தான் அணியும், இந்தியாவுக்கு செல்லாது என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்குவி அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் மூன்று விதமான முடிவுகள் எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் முடிவு:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவுக்கு ஆதரவாக முடிவு எடுத்து இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வெளிநாட்டில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை வலியுறுத்தும். இந்தியா ஆடாவிட்டால் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு ஏற்படும் வருவாய் இழப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு வேறு வழி இன்றி அதற்கு ஒப்புக் கொள்ளும்.
இரண்டாவது முடிவு:
இந்தியாவுக்காக மட்டும் வேறு நாட்டில் தொடரை நடத்த முடியாது என பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகும் முடிவை எடுக்கலாம். அப்படி நடந்தால் பாகிஸ்தான் அணியை சேர்த்தோ அல்லது பாகிஸ்தான் அணியை விடுவித்து விட்டோ வேறு நாட்டில் சாம்பியன்ஸ் திருப்பி தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தலாம். ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அல்லது தென்னாப்பிரிக்காவில் இந்த தொடரை நடத்த அதிக வாய்ப்பு உள்ளது.
மூன்றாவது முடிவு:
இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றால் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை காலவரையின்றி தள்ளி வைக்கலாம். ஆனால், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.
இந்த மூன்று முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் இனி இந்தியா வந்து விளையாட முடியாது என்ற முடிவை எடுத்தால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்காது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை, 2025 ஆடவர் ஆசிய கோப்பை, 2026 ஆடவர் டி20 உலகக் கோப்பை, 2029 சாம்பியன்ஸ் டிராபி, 2029 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை ஆகியவை இந்தியாவில் நடைபெற உள்ளன. இவற்றில் பாகிஸ்தான் பங்கேற்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா -பாகிஸ்தான் ஆடும் போட்டிகளே மிகப்பெரிய வருமானத்தை தருவதாக உள்ளதால் இது மிகப் பெரிய இழப்பாக அமையும்.