துபாய்: அட இந்தியா பாகிஸ்தான் மேட்ச் விடுங்கப்பா நம்ம ஃபோகஸ் எப்பவும் தல தோனி மேல தான் என தோனியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி துபாயில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் இடையே தோனி மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ஒன்றாக அமர்ந்து ஒரு டிவியில் இந்தியா -பாகிஸ்தான் போட்டியை நேரலையில் பார்த்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகின. இது போட்டி ஒளிபரப்பப்பட்ட ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலேயே ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதைப் பார்த்த தோனி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்த போட்டி நடைபெற்ற நேரத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் தொடர்பான விளம்பர படம் ஒன்றில் தோனி நடித்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கான விளம்பர படப்பிடிப்பில் அவர் இருந்திருக்கிறார். அதே சமயம் இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் நடைபெற இருந்தது.
இதை அடுத்து தோனி இந்த போட்டியை நேரலையில் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு அதே விளம்பரத்தில் நடிக்க வந்த பாலிவுட் நடிகர் சன்னி தியோலும் இந்த போட்டியை தோனியுடன் அமர்ந்து நேரலையில் பார்த்தார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் முதல் பகுதி மிகவும் மந்தமாக சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தான் அணி 25 ஓவர்களை கடந்தும் 100 ரன்களை எடுக்கவில்லை. அதனால் போட்டி மந்தமாக சென்று கொண்டிருந்த நிலையில் தோனி இந்த போட்டியைப் பார்க்கும் வீடியோ காட்சிகள் அவ்வப்போது நேரலையில் காட்டப்பட்டன. அதைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 10 ரன்கள் எடுத்தும், பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன் பின் சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சவுத் ஷகீல் அரைசதம் அடித்து 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முகமது ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.