IND vs NZ Final: கோல்டன் பேட் விராட் கோலிக்கு கிடைப்பது அவ்ளோ ஈஸி இல்லை.. 2 வீரர்கள் கடும் போட்டி
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி கோல்டன் பேட் விருதை வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எப்போதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கு கோல்டன் பேட் விருது வழங்கப்படும். இந்த முறை மூன்று வீரர்களுக்கு இடையே இந்த கோல்டன் பேட் விருதை வெல்வதற்கான போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா, இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்த போட்டியில் முன்னணியில் உள்ளனர். தற்சமயம் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார்.

பென் டக்கெட் மூன்று போட்டிகளில் 227 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் இருக்கிறார். ஆனால், இங்கிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறி இருக்கும் நிலையில், தற்போது இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் அதிக ரன் குவித்தால் கோல்டன் பேட் விருதை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
பென் டக்கெட் 227 ரன்கள் சேர்த்து இருக்கும் நிலையில், ரச்சின் ரவீந்திரா 226 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 225 ரன்கள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 217 ரன்கள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் 216 ரன்கள் உடன் ஐந்தாவது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 195 ரன்கள் உடன் ஆறாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
இந்த ஆறு பேரில் ரச்சின் ரவீந்திரா, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர். அவர்கள் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்தால் கோல்டன் பேட் விருதை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவர்கள் மூவருமே பென் டக்கெட்டின் ஸ்கோரை முந்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், இவர்கள் மூவருக்கும் இடையில் கோல்டன் பேட் வெல்வதற்கான போட்டி இருக்கும்.
ரச்சின் ரவீந்திராவை விட கோலி 9 ரன்கள் குறைவாக இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் ரச்சினை விட 31 ரன்கள் குறைவாக இருக்கிறார். உதாரணத்திற்கு, இறுதிப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா 100 ரன் சேர்த்தால், அப்போது விராட் கோலி 110 ரன்கள் சேர்க்க வேண்டும். அதன் மூலம் ரச்சின் ரவீந்திராவை விட அதிக ஸ்கோர் அடித்த வீரராக இருப்பார் கோலி.
அதேபோல ரச்சின் ரவீந்திரா 100 ரன்கள் சேர்த்தால், ஸ்ரேயாஸ் ஐயர் 132 ரன்கள் சேர்க்க வேண்டும். அதன் மூலம் ரச்சின் ரவீந்திராவை விட அதிக ஸ்கோர் அடித்த வீரராக இருப்பார் ஸ்ரேயாஸ். இவ்வாறு இந்த மூன்று வீரர்களுக்கு இடையேயும் கோல்டன் பேட் விருதை யார் வெல்லப் போகிறார்கள் என்ற போட்டி நிலவி வருகிறது.
இவர்களுக்கு அடுத்ததாக கேன் வில்லியம்சன் மற்றும் சுப்மன் கில் கோல்டன் பேட் விருதை வெல்லும் வாய்ப்பை உடைய வீரர்களாக உள்ளனர். கேன் வில்லியம்சன் 189 ரன்களும், சுப்மன் கில் 157 ரன்களும் அடித்துள்ளனர். இவர்களும் அதிக ரன்கள் சேர்த்தால் கோல்டன் பேட் விருதை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுவரை சாம்பியன்ஸ் டிராபியில் மூன்று இந்திய வீரர்கள் கோல்டன் பேட் விருதை வென்றுள்ளனர். 2000 ஆவது ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சவுரவ் கங்குலி, 2002 ஆவது ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வீரேந்தர் சேவாக், 2013 மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ஷிகர் தவான் ஆகியோர் இந்த கோல்டன் பேட் விருதை வென்று உள்ளனர்.
விராட் கோலி இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோல்டன் பேட் விருது வென்றால், இதுவே அவரது முதல் சாம்பியன்ஸ் டிராபி கோல்டன் பேட் விருதாக இருக்கும். 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையிலும் அவர் கோல்டன் பேட் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் கோல்டன் பேட் விருதை வென்றால், ஒரு நாள் போட்டி உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் கோல்டன் பேட் விருது வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.


Click it and Unblock the Notifications