மும்பை: இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலத்திலும் எப்போதுமே ஒவ்வொரு ஸ்டார் வீரர்கள் உருவாகிக் கொண்டு இருப்பார்கள். கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என அந்தந்த தலைமுறையில் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக கோலோச்சுவார்கள். அந்த வரிசையில் தற்போது 25 வயதான பஞ்சாப்பை சேர்ந்த கில் இணைந்திருக்கிறார்.
எப்படி சச்சின், தோனி ஆகியோர் அணியில் இருக்கும் போது விராட் கோலி முக்கியமான வீரராக மாறினாரோ, அதேபோல் கில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசர் என்ற இடத்திற்கு வந்திருக்கிறார்.

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களுடைய கிரிக்கெட் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ள நிலையில் கில் தான் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட போகிறார். இதற்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் துணை கேப்டனாக கில்லை நியமித்து இருக்கின்றார்கள். கில் 2018 அண்டர் 19 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் துணை கேப்டனாக செயல்பட்டார்.
இந்த தொடரில் அவர் 372 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அரையிறுதி ஆட்டத்தில் சதம் விளாசினார். இதேபோன்று ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் சீசனில் தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடிய போது 268 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இந்த தருணத்தில் தான் விராட் கோலி, கில்லை உடனடியாக இந்திய கிரிக்கெட் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என முடிவு எடுத்தார்.
இதன் மூலம் கில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். இதேபோன்று அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அறிமுகமான கில், தான் எதிர்காலத்திற்கான வீரர் என்பதை நிரூபித்தார். காபா டெஸ்ட் போட்டியில் 146 பந்துகளை எதிர் கொண்டு 91 ரன்கள் குவித்தார்.
இந்த சூழலில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனக்கு என பெயரை 2022 ஆம் ஆண்டு தான் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் மொத்தமாக கில் 203 ரன்களை அடித்தார். இதன் மூலம் கில்லுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது. அதேபோன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை அடித்தார். அந்த தொடரிலும் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதே போன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மொத்தமாக 80 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு கில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உச்சத்துக்கு சென்றார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மொத்தமாக 207 ரன்கள் அடித்தார். விராட் கோலிக்கு பிறகு அந்த தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெயரை பெற்றார். இதேபோன்று ஜனவரி மாதம் 18ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கில் இரட்டை சதம் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.
இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற பெருமையை அப்போது பெற்றார். இதனை தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 63 பந்துகளில் 126 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கில்லுக்கு 2023 ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்தது. இதில் வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்த கில், அந்த ஆசிய கோப்பை தொடரில் மொத்தமாக 302 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார்.
இப்படி கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தியதால் தனது 38-வது இன்னிங்ஸிலே சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்து அதிவேகமாக 2000 ரன்களை தொட்ட ஹசிம் அம்லாவின் சாதனையை முறியடித்தார். இதேபோன்று 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் ஒன்பது போட்டிகளில் 354 ரன்கள் குவித்தார்.
2024 டி20 உலக கோப்பையில் ரிசர்வ் வீரராக மட்டுமே இடம் கிடைத்தது. அதன் பின் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக பதவியேற்று அங்கேயும் சென்று தொடரை வென்றார். இந்த நிலையில் தான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது கில்லுக்கு இந்திய அணி துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் கில் சதம் அடித்தவுடன், சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
தற்போது வரை 52 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய கில் 2734 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 8 சதம், 15 அரை சதம் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 போட்டியில் விளையாடியுள்ள கில், ஐந்து சதம், 7 அரை சதம் அடித்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் 21 போட்டியில் விளையாடியுள்ள கில், ஒரு சதம், மூன்று அரை சதம் அடித்துள்ளார். இப்படி விராட் கோலி போலவே அபாரமாக விளையாடி வருவதால் ரசிகர்கள் இவரை பிரின்ஸ் என்று அழைக்கிறார்கள்.