சாம்பியன்ஸ் டிராபி.. ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புதல் அளித்த ஐசிசி.. பாகிஸ்தான் நிபந்தனையும் ஏற்பு!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் விதித்த நிபந்தனையும் ஏற்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை கூட இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கு பிசிசிஐ-ன் எதிர்ப்பு காரணமாக அமைந்துள்ளது.

இந்திய வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஐசிசி தரப்பில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
ஒரு கட்டத்தில் பிசிபி சார்பாக பல்வேறு நிபந்தனைகள் வைக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் இந்திய அணியுடன் முத்தரப்பு தொடருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், பாகிஸ்தானுக்கு ஐசிசி தரப்பில் அளிக்கப்படும் நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும், 2031 வரை இந்தியாவில் நடக்கும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் விளையாடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் எந்த நிபந்தனையையும் பிசிசிஐ ஏற்கவில்லை. இதனிடையே ஐசிசி தலைவராக ஜெய் ஷா பதவியேற்றார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்திய அணி விளையாடும் அத்தனை போட்டிகளையும் துபாயில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற 7 அணிகள் விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் உள்ள 3 மைதானங்களில் நடக்கவுள்ளது. அதேபோல் இந்திய அணி விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காததற்கு எந்த இழப்பீடும் அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது என்ற நிபந்தனையும் ஏற்கப்பட்டுள்ளது.
இதனால் 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் ஆட்டம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்தவுள்ளன. இதனால் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்துவதால் ஏற்படும் இழப்பீட்டை தடுக்க ஐசிசி வேறு மாதிரி சமாதானம் செய்துள்ளது. அதாவது 2027ஆம் ஆண்டுக்கு பின் நடக்கும் ஐசிசி மகளிர் தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்தால் பிசிசிஐ, பிசிபி மற்றும் ஐசிசி ஆகிய 3 தரப்பும் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications