கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தானில் இந்திய அணி வீரர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக கூறியுள்ள அவர், எங்களின் அன்பை இந்திய அணியினர் புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இதற்கான உத்தேச அட்டவணை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஐசிசியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் இதுவரை எந்த ஒப்புதலும் அளிக்கப்படவில்லை. ஏனென்றால் இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்க இதுவரை மத்திய அரசு தரப்பில் எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை.

இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பிசிசிஐ தரப்பில் ஐசிசியிடம் கேட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ, ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகிய மூன்று தரப்பும் எந்த கருத்தும் கூறவில்லை. இதனால் ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி பேசுகையில், இந்திய அணியை பாகிஸ்தான் நாட்டிற்கு வரவேற்கிறேன். 2005ஆம் ஆண்டு இந்தியாவிற்கு நாங்கள் பயணித்த போது, அவ்வளவு மரியாதையை பெற்றிருக்கிறோம். என்னை பொறுத்தவரை அரசியலை விளையாட்டுடன் இணைக்க தேவையில்லை.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணிப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். விராட் கோலி மட்டும் ஒருமுறை பாகிஸ்தான் வந்தால், அவர் இந்தியாவில் கிடைத்த அன்பையே மறந்துவிடுவார். பாகிஸ்தானில் விராட் கோலிக்கு மிகப்பெரிய மாஸ் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விராட் கோலியை கொண்டாடி வருகின்றனர்.
எனக்கும் விராட் கோலி மிகவும் பிடித்த வீரர். என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மைதானங்களில் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கே நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். கடைசியால 2008ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் பயணித்தது குறிப்பிடத்தக்கது.