மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா அணியை அறிவித்தனர்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணிகளில் யார், யாருக்கு இடம் கிடைத்து உள்ளது என்று பார்க்கலாம்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் - ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா.
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் - ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் பும்ரா, முகமது ஷமி என இரண்டு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் பெயரும் இடம் பெற்று உள்ளது. பும்ரா தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறார். அவர் முழு அளவில் தயாரான உடன் விளையாடுவது உறுதி செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு பதிலாக இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா இடம் பெற்று இருக்கிறார். இந்த ஒரு மாற்றத்தை தவிர, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்ற அதே இந்திய அணி இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது.
இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் ஆகிய இருவருக்கும் ஒருநாள் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்திக்கும் இந்திய ஒருநாள் அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
அதே சமயம், மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் விளையாடுவது கடினம் எனவும், கே எல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் எனவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.