டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால், பிசிசிஐ பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல முடியாது எனவும், இந்திய அரசு பாகிஸ்தான் செல்ல அனுமதி அளிக்கவில்லை எனவும் கூறி இருந்தது.

இந்த விவகாரம் குறித்து இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் பிசிசிஐ இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரியான ரந்தீர் ஜெய்ஸ்வால் அரசின் நிலைப்பாடு பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார்.
"பிசிசிஐ இந்த விவகாரத்தில் அறிக்கை அளித்து இருக்கிறது. அவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். எனவே, இந்திய அணி, பாகிஸ்தான் செல்வதற்கு அதிக வாய்ப்பு இல்லை." என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் எந்த சூழ்நிலையிலும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என தெரிய வந்துள்ளது.
பிசிசிஐ பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை சுட்டிக் காட்டியதாலும், வெளியுறவுத் துறை அனுமதி அளிக்காததாலும் இந்திய கிரிக்கெட் வீரர்களால் பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது. இந்திய அணி ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முயன்று வருகிறது.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. முழு தொடரையும் பாகிஸ்தானில் தான் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. மேலும், இனி இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனவும் அறிவித்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
இந்த விவகாரம் சூடு பிடித்து இருக்கும் நிலையில் மத்திய அரசும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வரும் காலங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என விமர்சகர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது.