ராவல்பிண்டி: முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் மீது துன்புறுத்தல் வழக்கை பதிவு செய்ய உள்ளதாக மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முஷ்டாக் அகமது வீடியோ ஒன்றை வெளியிட்டு மிரட்டி இருக்கிறார்.
இந்த வீடியோ வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் பங்கேற்ற கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் அவர்கள் முன்னிலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகின் முன்னணி அணியாக இருந்தது.

அப்போது வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜொலித்து வந்தனர். அவர்கள் இருவரும் அப்போது உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாகவும் இருந்தனர். அதே சமயத்தில் முஷ்டாக் அகமது சிறந்த சுழற் பந்து வீச்சாளராக விளங்கினார்.
இந்த நிலையில்தான், தான் ஆடிய காலத்தில் அவர்கள் இருவராலும் பாதிக்கப்பட்டதாக தற்போதும் முஷ்டாக் அகமது குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். ஸ்போர்ட்ஸ் சென்ட்ரல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். மேலும், தான் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது சரியாக செயல்படவில்லை என வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டி, அவர்கள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறியிருக்கிறார்.
மேலும், பாகிஸ்தான் ரூபாயில் சுமார் 20 கோடி ரூபாய் வக்கார் யூனிஸிடமும், 15 கோடி ரூபாய் வாசிம் அக்ரமிடமும் நஷ்ட ஈடாக பெற உள்ளதாகவும், இது குறித்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதில் சில வேடிக்கையான விஷயங்களையும் முஷ்டாக் அகமது கூறி இருக்கிறார். தான் உயரம் குறைவாக இருப்பதால் வக்கார் யூனிஸ் தன்னை வீழ்த்தி விடலாம் என நினைக்க முடியாது எனவும், எந்த ஒரு சண்டையும் உயரத்தை வைத்து போடப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். வாசிம் அக்ரம் தான் ஆடிய காலத்தில் தன்னை வலை பயிற்சி செய்ய அழைத்துச் சென்று பவுன்சர்களை வீசி தனது பேட்டிங் நம்பிக்கையை உடைத்ததாகவும், அவர் அதை செய்யாமல் இருந்திருந்தால் தான் பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக மாறி இருக்க முடியும் எனவும் கூறி இருக்கிறார்.
இதற்கு வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் அந்த நிகழ்ச்சியிலேயே நையாண்டியாக பதிலும் அளித்துள்ளனர். வாசிம் அக்ரம் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கையில், "முஷ்டாக் அகமது நைட் வாட்ச்மேனாக கூட இருக்க முடியாதவர். அவரை எப்போது நைட் வாட்ச்மேனாக அனுப்பினாலும் டக் அவுட் ஆகி விடுவார். எனவே, நான் அவரை நீதிமன்றத்தில் சந்தித்து கொள்கிறேன்." என கூறி இருக்கிறார்.
மறுபுறம் வக்கார் யூனிஸ் பதில் அளிக்கையில், "என்னிடம் 20 கோடி ரூபாய் இல்லை. எனவே, நான் உங்களிடம் தீவிரமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் இதயத்தில் இருக்கும் வலியை மறந்து எங்களை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை அதை செய்யவில்லை என்றால், உங்களை எப்படி அணுக வேண்டும் என எங்களுக்கு தெரியும்." என நையாண்டியாக கூறினார்.
வக்கார் யூனிஸ் மற்றும் வாசிம் அக்ரம் பேசியதை கேட்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் குபீரென சிரித்தனர். இது குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு விவாதங்களும் நடந்து வருகின்றன. முஷ்டாக் அகமது கவனம் பெறுவதற்காக இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டாரா? என பேசி வருகின்றனர்.