2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன் கேப்டன்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்வும், தொடக்க விழாவும் நடைபெற இருந்தது. ஆனால், சில காரணங்களால் கேப்டன்கள் சந்திக்கும் நிகழ்வு மற்றும் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதலில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தாமதமாக வர இருப்பதால், திட்டமிட்டபடி விழா நடத்த முடியவில்லை என்று கூறப்பட்டது. மேலும், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்து துபாயில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்ற காரணமும் கூறப்பட்டது.

ஆனால், போட்டி தேதிகள் மற்றும் பல்வேறு அணிகளின் பயண திட்டங்களின் காரணமாகவே தொடக்க விழா மற்றும் கேப்டன்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. வழக்கமாக, உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐசிசி தொடர்களுக்கு முன் கேப்டன்கள் சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெறும்.
இதில் அனைத்து அணி கேப்டன்களும் கலந்து கொள்வார்கள். ஆனால், இந்தியாவின் போட்டிகள் துபாயில் நடப்பதால், இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தானில் நடக்கும் இந்த சந்திப்புகளில் கலந்து கொள்வாரா? என்பது சந்தேகமாக இருந்தது. ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியானது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் நாள் அன்று (பிப்ரவரி 19), பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. அந்தப் போட்டி பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெறும். இரண்டாம் நாளான பிப்ரவரி 20 அன்று இந்தியா மற்றும் வங்கதேசம் மோதும் போட்டி துபாயில் நடைபெறும்.
கேப்டன்கள் சந்திப்பு மற்றும் தொடக்க விழா பிப்ரவரி 18 அன்று நடத்த திட்டமிட்டால், இரு நாட்களில் துபாயில் நடக்கும் போட்டிக்கு இந்திய அணி கேப்டனும், வங்கதேச அணி கேப்டனும் அவசர கதியில் கிளம்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
மறுபுறம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற உள்ள மூன்று மைதானங்களிலும் இன்னும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு (பிசிபி) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தொடக்க விழாவையும், கேப்டன்கள் சந்திப்பையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளன.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது தொடக்க விழாவும் ரத்து ஆகி இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கலக்கத்தில் உள்ளது. இந்த தொடரை சரியாக நடத்த முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.