Champions Trophy: இந்தியாவுடன் முத்தரப்பு தொடர்.. பிடிவாதம் காட்டும் பாகிஸ்தான்.. என்ன நடந்தது?
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் காரணமாக, இதுவரை இறுதி முடிவு எடுக்க முடியாமல் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளதால், இந்திய அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் பயணிக்க ஒப்புதல் அளிக்காத நிலையில், பிசிசிஐ தரப்பில் ஐசிசி நிர்வாகத்திடம் விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டது.

இதனால் பிசிசிஐ சார்பாக ஆசியக் கோப்பையை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் யோசனை முன் வைக்கப்பட்டது. இதனை அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஏற்ற நிலையில், பாகிஸ்தான் மட்டும் ஏற்கவில்லை. இந்திய அணி பாகிஸ்தான் வந்து தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
இதன் காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பாக ஏராளமான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதில், சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்தினால், 2031 வரை இந்தியாவில் நடக்கும் ஐசிசி தொடர்களையும் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும்.

ஐசிசி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை ஒரே குரூப்பில் கொண்டு வரக் கூடாது. ஐசிசி தரப்பில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதிக்கான சதவிகிதத்தை உயர்த்த வேண்டும் என்று ஏராளமான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் விளையாடும் வகையில் முத்தரப்பு தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அடக்கம்.
இதற்கு பிசிசிஐ தரப்பில் எந்த இசைவும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து ஆலோசிக்க இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவிருந்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தங்களின் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்ததால், ஆலோசனை கூட்டம் டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பாக ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக நடக்கவுள்ள 15 போட்டிகளில் 5 போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி விளையாடும் 3 லீக் போட்டிகளும், ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியும் அடக்கமாகும்.
Story first published: Thursday, December 5, 2024, 19:37 [IST]
Other articles published on Dec 5, 2024


Click it and Unblock the Notifications