துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கவுள்ள நிலையில், அந்தத் தொடருக்கான பரிசுத்தொகை என்ன என்பது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு அளிக்கப்படும் தொகை ஐபிஎல் தொடர் ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தை விட மிகவும் குறைவானது என்பது நம்ப முடியாத தகவலாக உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்புப்படி 19.45 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வி அடையும் அணிக்கு 9.72 கோடி பரிசாக வழங்கப்படும். அரை இறுதிக்கு முன்னேறி தோல்வி அடைந்த இரு அணிகளுக்கும் தலா 4.86 கோடி ரூபாய் வழங்கப்படும். ஒட்டுமொத்த பரிசு தொகையானது 59 கோடி ஆகும். 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒப்பிடும்போது 53 சதவீதம் இந்தத் தொகை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

குரூப் சுற்றில் பங்கேற்று அரையிறுதிக்கு முன்னேறாத அணிகளுக்கும் பெருமளவில் தொகை வழங்கப்பட உள்ளது. குரூப் சுற்று போட்டிகளில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றிக்கு மட்டும் 29 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும். இந்தத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாத அணிகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா 3.04 கோடி ரூபாய் வழங்கப்படும். ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தை பெறும் அணிகளுக்கு 1.21 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
இதைத்தவிர்த்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் பங்கேற்பதற்கான தொகையாக 1.08 கோடி ரூபாய் வழங்கப்படும். ஒரு அணி தனது குரூப் சுற்று போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வென்றால் அதிகபட்சமாக 21.4 கோடி ரூபாய் மட்டுமே வெல்ல முடியும்.
இது ஐபிஎல் தொடரில் வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சம்பளத்தை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி ரூபாய்க்கும், வெங்கடேஷ் ஐயர் 23.75 கோடி ரூபாய்க்கும் வாங்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.