துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்து நாளை முதல் அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் உள்ளதா? குறைந்தபட்சம் எத்தனை ஓவர்கள் வீசப்பட வேண்டும்? என்பது பற்றி பார்க்கலாம்.
சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களின் அரையிறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில், மழையால் போட்டி தடைபட்டாலோ, டி.எல்.எஸ் முறைப்படி முடிவை அறிவித்தாலோ தேவையற்ற சர்ச்சைகளை எழுந்தன. அதை தவிர்க்க வேண்டி சர்வதேச கிரிக்கெட் அமைப்பு ரிசர்வ் நாட்களை எப்போதுமே முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

அதன்படி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 4 அன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. முதல் அரையிறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும். அந்தப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக மார்ச் 5 அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 5 அன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ரிசர்வ் நாளாக மார்ச் 6 அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து மார்ச் 9 அன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும். இந்திய அணி அரையிறுதியில் வென்றால் இந்த இறுதிப்போட்டி துபாயில் நடைபெறும். இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தால், இந்த இறுதிப் போட்டி பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெறும். இந்த இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக மார்ச் 10 அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் மேலும் ஒரு முக்கிய அம்சமும் உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் குறைந்தபட்சம் ஒரு இன்னிங்ஸுக்கு 25 ஓவர்கள் வீசப்பட வேண்டும். அப்போதுதான் போட்டி முடிவு அறிவிக்கப்படும். உதாரணத்திற்கு, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால், முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 25 ஓவர்களை பேட்டிங் செய்திருக்க வேண்டும்.
அடுத்து இரண்டாவதாக சேசிங் செய்யும் அணிக்கும் 25 ஓவர்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை மழையால் முதல் நாள் ஆட்டம் முழுவதும் தடைப்பட்டால், கூடுதலாக இரண்டு மணி நேரம் வழங்கப்படும். அதற்குள் போட்டியை முடிக்க முடியாமல் போனால் ரிசர்வ் நாள் அன்று போட்டி தொடரும்.
போட்டி நாள் மற்றும் ரிசர்வ் நாளில் மொத்தமாக இரண்டு அணிகளுக்கும் குறைந்தபட்சம் 25 ஓவர்கள் பேட்டிங் வழங்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே அந்த போட்டியில் முடிவு அறிவிக்கப்படும். அரையிறுதியில் இரண்டு இன்னிங்ஸிலும் 25 ஓவர்கள் வழங்கப்பட முடியாத அளவுக்கு மழை பெய்தாலோ அல்லது வேறு சூழ்நிலைகள் நிலவினாலோ அப்போது குரூப் சுற்றில் அந்த அணி பெற்ற புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும்.
ஒருவேளை இறுதிப் போட்டியில் போட்டி நாள் மற்றும் ரிசர்வ் நாளில் போட்டியை நடத்தி முடிக்க முடியவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.