விஜய் ஹசாரே தொடரில் 2வது சதம்.. தனியாளாக போராடிய ஸ்ரேயாஸ் ஐயர்.. சாம்பியன்ஸ் டிராபியில் இடம் உறுதி!
அகமதாபாத்: விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரி அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 133 பந்துகளில் 4 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 137 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கும் 2வது சதம் என்பதால், அவருக்கு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களுக்கான இந்திய அணியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வந்தார். ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஃபார்மை இழந்ததோடு, பல்வேறு ஒழுங்கீன சர்ச்சைகளிலும் மாட்டிக் கொண்டார். இதன்பின் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், அவருக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிய விஷயமாக மாறியது.

இதனிடையே அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்திய ஒருநாள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கு தயாராகும் வகையில் உள்நாட்டில் விஜய் ஹசாரே டிராபி நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகா அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி அசத்தினார். இதன்பின் நடந்த 4 போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய ரன்களை அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அகமதாபாத் மைதானத்தில் இன்று புதுச்சேரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் சித்தேஷ் லேட் - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய சித்தேஷ் லேட் 34 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 82 ரன்களுக்கு மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது டெய்லண்டர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ரன்களை குவித்தார்.
அன்கோல்டர் கொஞ்சம் கம்பெனி கொடுத்தாலும், 225 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. ஆனால் கடைசி வரை களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி அசத்தினார். அதேபோல் மும்பை அணியின் ஸ்கோர் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்களை எட்டியது. அதிரடியாக ரன்களை குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் 133 பந்துகளில் 4 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 137 ரன்களை விளாசி அசத்தினார்.
விஜய் ஹசாரே தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி இருந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் எழுச்சி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications