விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சுரேஷ் ரெய்னா அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி மூன்று சதங்கள் அடிப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ரன் குவிப்பார்களா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.

இருவரும் கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்மில் உள்ளனர். உள்ளூர் போட்டிகளில் ஆடிய போதும் அவர்கள் இருவரும் ரன் குவிக்காமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இந்த நிலையில் தான் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
"விராட் கோலி ஒரு வீரராக இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. அவர் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவார். ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது அவருக்கு மிகவும் பிடித்தமானதும் கூட."
"விராட் கோலி ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் நன்றாக ரன் குவித்து இருக்கிறார். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் ரன் குவித்ததை நாம் மறந்து விட முடியாது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி 3 சதங்களை அடிப்பார் என நான் நினைக்கிறேன்." என்றார் சுரேஷ் ரெய்னா.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூன்று குரூப் சுற்று போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் குரூப் சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடித்தால் அரை இறுதிக்கு முன்னேற முடியும். அரை இறுதியில் வென்றால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.
எப்படி பார்த்தாலும் அதிகபட்சமாக இந்திய அணி 5 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். அந்த ஐந்து போட்டிகளில் விராட் கோலி 3 சதங்களை அடிப்பார் என சுரேஷ் ரெய்னா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.