துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி தேர்வில் இந்திய அணி மிகப்பெரிய சொதப்பலை செய்திருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். தற்போது இந்திய அணியின் கேப்டனும், துவக்க வீரருமான ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும்போது ரோஹித் சர்மாவின் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அது சாதாரணமானது தான் என அவர் அப்போது கூறியிருந்தாலும், அவர் இதுவரை வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்யவில்லை. எனவே, அவர் நியூசிலாந்து போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என இந்திய அணி வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக யாரையும் மாற்று துவக்க வீரராக அணியில் தேர்வு செய்வது என்ற சிக்கல் உள்ளது. ரிஷப் பண்ட் நிச்சயமாக துவக்க வீரர் இல்லை. இங்குதான் அணி தேர்வில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்பு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முதற்கட்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அதில் ஜெய்ஸ்வால் மாற்று துவக்க வீரராக 15 வீரர்கள் இடம் பெற்ற அணியில் இருந்தார். ஆனால், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட அணியில் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி ஐந்தாவது சுழற்பந்து வீச்சாளராக அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
எதற்காக ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் உத்தேச அணியில் இருக்கிறார்கள்? என பலரும் கேள்வி எழுப்பினர். ஏனெனில், ஒரு போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பிளேயிங் லெவனில் ஆடவைப்பது சாத்தியம். அதற்கு மேல் ஆடினால் அதனால் எந்த பயனும் இருக்காது. அத்தனை சுழற்பந்து வீச்சாளர்களையும் பந்து வீச வைப்பது என்பது தேவையற்ற ஒன்றாக இருக்கும்.
மேலும், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை இந்திய அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பிளேயிங் லெவனில் ஆடினர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை.
தற்போது ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஜெய்ஸ்வால் இந்த உத்தேச வீரர்கள் அடங்கிய அணியில் இடம் பெற்றிருந்தால், அவரை பிளேயிங் லெவனில் தேர்வு செய்திருக்கலாம். தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, தான் இந்திய அணி தேவையன்றி அதிக சுழற்பந்து வீச்சாளர்களை அழைத்துச் சென்று விட்டதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல் துவக்க வீரராக இறங்க வாய்ப்பு உள்ளது. கே.எல்.ராகுலுக்கு பதிலாக மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் இடம் பெறுவார். இதுவே இப்போதைக்கு இந்திய அணியின் திட்டமாக உள்ளது.