லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, நியூசிலாந்து அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது குறித்து முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கடும் விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்திடம் சரணடைந்து விட்டதாகவும், கடைசி 10 ஓவர்களில் 140 ரன்கள் எடுக்க முடியுமா? என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அடுத்து இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 362 ரன்கள் எடுத்தது.
அடுத்து தென்னாப்பிரிக்கா அணி ஆடியபோது, அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ராசி வான் டெர் டூசன் இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். ஆனாலும், வெற்றிக்கு தேவைப்படும் ரன் ரேட் விகிதம் அதிகமாக இருந்ததால் தென்னாப்பிரிக்கா அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அடுத்து அந்த அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.
டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் நின்று 67 பந்துகளில் சரியாக 100 ரன்கள் அடித்திருந்தார். ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. 40 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே தென்னாப்பிரிக்காவின் தோல்வி உறுதியாகிவிட்டது. இதைத்தான் தினேஷ் கார்த்திக் விமர்சித்து இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், "நான் தென்னாப்பிரிக்காவின் தோல்வியைப் பற்றிப் பதிவு செய்ய விரும்புகிறேன். நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவை அழித்துவிட்டது. இதை இப்படித்தான் எளிமையாக சொல்ல முடியும். தென்னாப்பிரிக்கா இந்தப் போட்டியிலேயே இல்லை. தென்னாப்பிரிக்கா நன்றாக விளையாடி நியூசிலாந்துக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இது சாதுவாக சரணடைவது போல இருந்தது."
"ஆட்டத்தின் துவக்கத்திலேயே தென்னாப்பிரிக்கா அணி போட்டியில் இருந்து விலகி விட்டதை போல இருந்தது. அரையிறுதிக்கு முன்னேறியதையே மகிழ்ச்சியான விஷயமாக நீங்கள் நினைத்துக் கொண்டு ஆட முடியாது. ஒரு சாம்பியன் அணியை போல ஆடுங்கள். கடைசி பத்து ஓவர்களில் 90 ரன்கள் அல்லது 85 ரன்கள் எடுக்கலாம் என நாம் நினைக்கலாம். ஆனால் 140 ரன்கள் எல்லாம் எடுக்க முடியாது. டி20 போட்டிகளில் கூட அது கடினமான விஷயம் தான். கையில் குறைவான விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு பழைய பந்தில் அத்தனை ரன்களை அடிப்பது சாத்தியமில்லை," என்றார் தினேஷ் கார்த்திக்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் சதம் அடித்து இருந்தனர். ரச்சின் ரவீந்திரா 101 பந்துகளில் 108 ரன்களையும், கேன் வில்லியம்சன் 94 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தனர். கிளென் பிலிப்ஸ் 37 பந்துகளில் 49 ரன்களும், டேரில் மிட்செல் 27 பந்துகளில் 49 ரன்களும் எடுத்தனர். இந்த நால்வரின் ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்து மார்ச் 9 அன்று நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.