2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட வீரர்கள்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பும்ரா முதுகு வலி காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
சேர்க்கப்பட்ட வீரர்கள்: பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகா பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

வருண் சக்கரவர்த்தியின் சேர்க்கை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தற்போது, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் அவருடன் சேர்த்து 5 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேகப் பந்துவீச்சாளர்கள்: வேகப்பந்து வீச்சாளராக பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய மூவரும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.
சுழற்பந்து வீச்சாளர்கள்: வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய ஐந்து பேரும் சுழற்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர்.
பேட்ஸ்மேன்கள்: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்படுவார்.
மாற்று வீரர்கள்
இவர்களைத் தவிர்த்து, மாற்று வீரர்களாக மூன்று பேரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் ஷிவம் துபே ஆகிய மூவரும் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால், இந்த மூன்று மாற்று வீரர்களில் ஒருவரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.
பயணம் செய்யாத மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியை வங்கதேசத்துக்கு எதிராக விளையாட உள்ளது.