தென்னாப்பிரிக்காவ பார்த்தாலே அடிப்பேன்.. ஹாட்ரிக் சதம் விளாசிய வில்லியம்சன்.. ஆடிப்போன ரபாடா!
துபாய்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசி நியூசிலாந்து ஜாம்பவான் கேன் வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 48வது சதத்தை பூர்த்தி செய்துள்ள கேன் வில்லியம்சன், ஐசிசி தொடர்களில் தனது 4வது சததை விளாசி அசத்தியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய தொடக்க வீரர் வில் யங் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் ரச்சின் ரவீந்திரா - கேன் வில்லியம்சன் கூட்டணி இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தது. சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா தனது 5வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். அவர் 108 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 61 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து ரன் குவிப்பை வேகப்படுத்திய வில்லியம்சன், ஒவ்வொரு ஓவரிலும் அபாரமாக விளையாடி பவுண்டரி விளாசி நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஒரு கட்டத்தில் முன்னதாக ஆடிய டாட் பால்களுக்கும் சேர்த்து வைத்து வில்லியம்சன் ரன்களை சேர்க்க தொடங்கினார். 80 ரன்களை கடந்த அவர், சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதற்கேற்ப 91 பந்துகளில் வில்லியம்சன் சதத்தை எட்டி அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் அடிக்கும் 15வது சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சதம் விளாசி வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார். அதேபோல் ஐசிசி தொடரில் வில்லியம்சன் அடிக்கும் 4வது சதம் இது.
சிறப்பாக ஆடிய அவர் சதம் அடித்த அதே ஓவரில் 102 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நியூசிலாந்து வீரர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர். வில்லியம்சனின் ஆட்டத்தால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 40 ஓவர்களிலேயே 250 ரன்களை கடந்தது.


Click it and Unblock the Notifications