இதுதான் இமாலய இலக்கு.. சரித்திரம் படைக்குமா தென்னாப்பிரிக்கா? 362 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி!
லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு 363 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைசி 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 66 ரன்களை விளாசிய நிலையில், ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சதம் விளாசி அசத்தியுள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் நியூசிலாந்து அணிக்கு வில் யங் - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் இருவருமே அதிரடியாக தொடங்கிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்க்கப்பட்டது.

பவர் பிளேவின் கடைசி ஓவரை அட்டாக் செய்ய நினைத்து வில் யங் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ரச்சின் ரவீந்திரா - கேன் வில்லியம்சன் கூட்டணி இணைந்து தென்னாப்பிரிக்கா பவுலர்களை பொளந்து கட்டியது. சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 47 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுமுனையில் நின்றிருந்த கேன் வில்லியம்சன் 61 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா தனது 5வது சதத்தை விளாசிவிட்டு, 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா சென்றபின், அவரின் பொறுப்பை கேன் வில்லியம்சன் எடுத்து கொண்டார். கியரை அதிரடிக்கு திருப்பிய கேன் வில்லியம்சன், 91 பந்துகளில் தனது 15வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்து அசத்தினார். இதன் காரணமாக 40 ஓவர்களில் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.
சிறப்பாக ஆடிய வில்லியசன் 102 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த லேதம் 4 ரன்களிலும், டேரல் மிட்சல் 49 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் ஃபினிஷரான கிளென் பிலிப்ஸ் - பிரேஸ்வெல் கூட்டணி இணைந்து அதிரடியில் பொளந்து கட்டியது. மார்கோ யான்சன் வீசிய 46வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசிய பிலிப்ஸ், ரபாடா வீசிய 48வது ஓவரில் 19 ரன்களை விளாசினார்.
கடைசி ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட, நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 27 பந்துகளில் 49 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல் நியூசிலாந்து அணி கடைசி 5 ஓவரில் மட்டும் 66 ரன்களை விளாசி இருக்கிறது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 363 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications