ஐசிசி சாம்பியன்ஸ்: பாகிஸ்தானை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா? #ct2017, #ct17
லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் பரமவைரியான பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக வெல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி திகழ்கிறது. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் இதில் பங்கேற்றன.
ஏ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் இடம்பெற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளும் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

இறுதியில் இந்தியா- பாகிஸ்தான்
முதலாவது அரை இறுதிப் போட்டி கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. 2-வது அரை இறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது இந்தியா. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இன்று இறுதிப் போட்டி
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் திகழ்கிறது. இதனால் இந்திய அணி 3-வது முறையாக ஐசிசி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

2002, 2013ல் சாம்பியன்
கடந்த 2002-ம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் கூட்டாக கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. 2013-ல் இங்கிலாந்தை 5 ரன்களில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

போராடும் பாகிஸ்தான்
அதேநேரத்தில் லீக் போட்டியில் தோற்ற பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என முனைப்பு காட்டவே செய்யும். இந்தியாவை எப்படியாவது வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என பாகிஸ்தான் போராட முயற்சிக்கும். இதனால் இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பரிசு தொகை
இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டியை முன்வைத்து கடந்த சில நாட்களாகவே ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் அதிரடி ஆபர்கள் அறிவிக்கப்பட்டு களைகட்டி வருகின்றன. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ14 கோடி; 2வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ7 கோடி வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications