பதில் சொல்லி காசு சம்பாதித்த ChatGPT.. இப்போ பிசிசிஐ-க்கு கோடி கோடியா கொட்டுது.. சுவாரசிய பின்னணி
மும்பை: நாம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நொடியில் பதில் சொல்லும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'சாட்ஜிபிடி' இனி இந்திய கிரிக்கெட் அணி ஆடும் போட்டிகளிலும் தடம் பதிக்கப் போகிறது. பிசிசிஐ நடத்தும் இந்திய அணியின் போட்டிகளுக்கு 'துணை ஸ்பான்சராக' இருக்க சாட்ஜிபிடி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் வரும் மார்ச் 2028 வரை நீடிக்கும்.
துணை ஸ்பான்சர் என்றால் என்ன? முதன்மை ஸ்பான்சர் என்பது தொடரின் பெயரிலும், வீரர்களின் ஜெர்சியிலும் முக்கியமாக இடம்பெறும். ஆனால், இந்த துணை ஸ்பான்சர்கள் மைதானத்தில் பவுண்டரி லைன் விளம்பர பலகைகள், டிவி திரையில் தோன்றும் விளம்பரங்கள் போன்றவற்றில் தங்களது பிராண்ட் லோகோக்களை வைப்பார்கள். இந்தியாவில் நடக்கும் 35 சர்வதேச போட்டிகள் மற்றும் ரஞ்சி கோப்பை போன்ற உள்நாட்டுத் தொடர்களுக்கும் இந்த விளம்பர உரிமைகள் பொருந்தும்.

இந்த ஸ்பான்சர் ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் குளிர்பான பிராண்டான 'காம்பா கோலா', ஆயுள் காப்பீட்டு நிறுவனமான 'எஸ்பிஐ லைஃப்' மற்றும் 'சாட்ஜிபிடி' ஆகிய மூன்று நிறுவனங்கள் பிசிசிஐ-யுடன் கைகோர்த்துள்ளன. இதில் காம்பா கோலா நிறுவனம் ஒரு போட்டிக்கு 1.31 கோடி ரூபாய் வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. சாட்ஜிபிடி மற்றும் எஸ்பிஐ லைஃப் ஆகிய நிறுவனங்கள் போட்டிக்கு தலா 1.2 கோடி ரூபாய் வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த ஏலத்தில் பிஸ்லெரி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களும் தலா 1.2 கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருந்தன. எனினும், கடும் போட்டிக்கு இடையே காம்பா கோலா மற்றும் சாட்ஜிபிடி ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்சர் உரிமையைத் தட்டிப் பறித்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் மார்ச் 2028 வரை உள்ளது. தற்போது இந்த துணை ஸ்பான்சர்கள் மூலம் பிசிசிஐ தனது கூடுதல் வருவாயை உறுதி செய்துள்ளது. இனி கிரிக்கெட் மைதானங்களிலும் சாட்ஜிபிடியின் லோகோவை ரசிகர்கள் அதிகம் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications

