தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் செய்த செயல்.. வாயடைத்துப் போன ஆஸ்திரேலியா..30 நிமிடத்தில் டிக்கெட் காலி
சென்னை: ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 தொடரான பிக் பாஷ் லீக்கின் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் டிசம்பர் 12 அன்று அரங்கேற உள்ளது. 2026 பிக் பாஷ் லீக் தொடரின் முதல் போட்டி மட்டும் இந்தியாவில், அதுவும் சென்னையில் நடைபெற உள்ளது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதும் இந்தப் போட்டிக்கு தமிழக ரசிகர்களிடையே வரலாறு காணாத வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் போட்டிக்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனையாக 2000 டிக்கெட்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. அந்த விற்பனை தொடங்கிய முதல் 30 நிமிடங்களிலேயே 2,000 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால் கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இந்த சீசனில் மிக வேகமாக விற்றுத் தீர்ந்த முதல் போட்டியாக இது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இதுபற்றி பிக் பாஷ் லீக் தலைவர் அலிஸ்டர் டப்சன் பேசுகையில், "பிக் பாஷ் லீக் என்பது ஆஸ்திரேலியாவுக்குள் மட்டுமே முடங்கிக் கிடக்கும் தொடர் என்ற காலம் முடிந்துவிட்டது. ஐபிஎல் தொடரைப் போல சர்வதேச அரங்கில் நாங்களும் தவிர்க்க முடியாத சக்தியாக வளர விரும்புகிறோம். உலகின் தலைசிறந்த வீரர்கள் எங்கள் லீக்கில் விளையாட வர வேண்டும். உலகிலேயே அதிக கிரிக்கெட் வெறி கொண்ட ரசிகர்கள் வாழும் இந்தியாவை விட இதற்குச் சிறந்த இடம் இருக்க முடியாது. சுமார் 35,000 பேர் அமரக்கூடிய சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழியும் என நம்புகிறோம்" என்றார்.
டிசம்பர் மாதம் சென்னைக்கு வடகிழக்குப் பருவமழை காலம் என்பதால் வானிலை ஒரு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. சமீபத்தில் ரஞ்சி போட்டிகளுக்கு முன்னதாகவும் சென்னையில் மழை பெய்தது. இதுகுறித்து பேசிய டப்சன், இந்தப் போட்டிக்கு மாற்று நாள் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். எனினும் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2.40 மணிக்குத் தொடங்குவதால், மழை குறுக்கிட்டாலும் கூடுதல் நேரம் வழங்கி போட்டியை முழுமையாக நடத்தி முடிக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் என்எப்எல் மற்றும் என்பிஏ அமைப்புகள் எல்லைகளைத் தாண்டிப் போட்டிகளை நடத்துவது போல, பிக் பாஷ் லீக்கும் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறி சரித்திரம் படைக்கவுள்ளது. இந்தியாவில் சேப்பாக்கம் போட்டி வெற்றிகரமாக அமைந்தால், வரும் காலங்களில் மகளிர் பிக் பாஷ் லீக் போட்டிகளையும் இந்திய மண்ணில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்றும், இந்திய ரசிகர்களின் ஆதரவை மகளிர் பிரீமியர் லீக் மூலம் நாம் பார்த்துள்ளோம் என்றும் டப்சன் கூறினார்.


Click it and Unblock the Notifications

