சென்னை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்துள்ள பாகிஸ்தான் அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டாஸ் வீசும்போது பாபர் அசாம் பெயரை உச்சரித்ததும் தமிழக ரசிகர்கள் அவருக்கு உற்சாகமாக ஆதரவு குரலை எழுப்பி வரவேற்றனர்.

இந்த நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், முதலில் நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்கிறோம் என்று கூறினார். இது தொடர்பாக பேசிய அவர் ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இரண்டாவது இன்னிங்ஸ் என்பது தோய்வாகவும் இருக்கும் என எண்ணுகிறேன்.
எங்களுடைய அணியில் இன்று சதாப்கான் இடம்பெற்றிருக்கிறார். நவாஸுக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் இந்த மாற்றம் நடந்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் எங்களுடைய நூறு சதவீத பங்களிப்பை கொடுக்க வேண்டும். அனைத்து வீரர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என நினைக்கிறேன்.
அதை நான் ஒவ்வொரு வீரரிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். மாலை நேரத்தில் ஆடுகளம் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தொடக்கத்தில் செயல்படும் என நம்புகிறேன் என்று பாபர் அசாம் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம்.
எனினும் டாஸ் நமது கையில் இல்லை. எங்கள் அணியில் நூர் முகமது விளையாடுகிறார். நாங்கள் கடந்த முறை பாகிஸ்தானுடன் இலங்கையின் விளையாடினோம். அதிலிருந்து அவர்கள் குறித்து எங்களுக்கு நன்றாகவே தெரியும். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பாகிஸ்தான் அணியை 250 ரன்களுக்குள் சுருட்டி அதனை சேஸ் செய்ய முயற்சி செய்வோம். எங்களுடைய அணியில் இன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இடம்பெற்று இருக்கிறார்கள் என்று ஹஸ்மதுல்லா கூறினார்.