இரவு 1 மணிக்கேவா.. 3வது ODI போட்டிக்கான டிக்கெட் வாங்க குவிந்த சென்னை ரசிகர்கள்.. எவ்வளவு தெரியுமா??
சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியை காண ரசிகர்கள் இரவு முழுவதும் மைதானத்தை சூழ்ந்திருந்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்களை வேகமாக இழந்த போதும், 39.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.

3வது ஒருநாள் போட்டி
இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை ( மார்ச் 19) விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த போட்டியை விட கடைசி மற்றும் 3வது போட்டி மீது தான் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனென்றால் இந்த போட்டி வரும் மார்ச் 22ம் தேதியன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறுவதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

டிக்கெட் விலை
இந்நிலையில் இப்போட்டிக்கான டிக்கெட்டை வாங்குவதற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ரசிகர்கள். அதாவது 3வது போட்டிக்கான ஆஃப்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆன்லைனில் அதிக விலை கொண்ட டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்ட சூழலில், அடிப்படை டிக்கெட் தொகையான( ரூ.1,200) ஆஃப்லைனில் விற்கப்படுகிறது. இதில் C, D மற்றும் E Lower ஸ்டாண்டுகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இரவே கூட்டம்
சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா ஹாஸ்டலில் விற்பனை கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்காக நேற்று நள்ளிரவு 1 மணியில் இருந்தே ரசிகர்கள் அங்கு குவிய தொடங்கிவிட்டனர். இரவு முழுவதும் வரிசையில் நின்றுக்கொண்டே தூங்கிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 3 ஸ்டாண்ட்கள் இருந்தாலும், டிக்கெட்கள் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட்கள் பெற்றனர்.

புதிய வசதிகள்
இது ஒருபுறம் இருக்க, சென்னை சேப்பாக்கம் மைதானம் சமீபத்தில் தான் புணரமைக்கப்பட்டது. குறிப்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி ஸ்டாண்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிஎஸ்கே கேப்டன் தோனி ஆகியோர் திறந்து வைத்தனர். புதிய வசதிகளுடன் முதல் போட்டியை தொகுத்து வழங்க தயாராக உள்ளது.


Click it and Unblock the Notifications