உலக கோப்பை டி20: ஒரு போட்டி கூட சென்னையில் கிடையாது.. மகளிர் கிரிக்கெட்டுக்கு லைவ் கிடையாது
சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 வருட காலம் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக கோப்பை டி20 கோப்பை ஆண்கள் கிரிக்கெட் தொடரில், ஒரு போட்டி கூட சென்னையில் நடைபெறவில்லை. இது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. கால அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்தது. பெங்களூர், மும்பை போன்ற நகரங்கள் மட்டுமின்றி, தர்மசலா என்ற சிறு நகரத்தில் கூட போட்டி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் சென்னைக்கு இடம் இல்லை. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக 'ஐ', 'ஜே', 'கே' ஆகிய 3 பார்வையாளர் மாடங்கள், முறையான அனுமதி பெறாமல் எழுப்பப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

போட்டியில்லை
இதனால் டி20 உலகக்கோப்பைப் போட்டி, சென்னைக்கு ஒதுக்கப்படாது என்று ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியல், அதை உறுதி செய்துள்ளது. சென்னையில் ஒரு போட்டியும் நடைபெறவில்லை.

மகளிர் கிரிக்கெட்
அதேநேரம், சென்னைக்கு மகளிர் டி20 போட்டிகளை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னைக்கு மகளிர் டி20 உலகக்கோப்பையின் 4 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

லைவ் கிடையாது
அதிலும், ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. இந்த நான்கு போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய கூடாது என ஐசிசி அறிவுறுத்தியுள்ளதாம். சென்னைக்கு எந்தப் போட்டியும் ஒதுக்கக்கூடாது என்றுதான் ஐசிசி முதலில் முடிவெடுத்திருந்ததாகவும், ஆனால், அதற்குப் பதிலாக சென்னையில் நடக்கும் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தவிர்த்துவிடலாம் என்று ஆலோசனை சொன்னபிறகே சென்னையில் போட்டியை நடத்த ஐசிசி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. .

சிஎஸ்கேவும் இல்லை
இதனால் சென்னையில் நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டிகளைக் காணவேண்டுமென்றால் நேரில் சென்றால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே 2 வருட காலம் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியை காண முடியாதே என்ற கலக்கத்திலுள்ள தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு, இப்போது கிரிக்கெட் பிரபலங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போயுள்ளது.


Click it and Unblock the Notifications