ஐபிஎல்: முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.
அனிருத், முரளி விஜய் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர். முதல் ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விளாசிய முரளி விஜய், அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து அனிருத்துடன் (ஸ்ரீகாந்த் மகன்), ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த இருவர் கொடுத்த கேட்சையும் கொல்கத்தா வீரர்கள் தவறவிட்டனர்.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிருத்தும், ரெய்னாவும் அடித்து ஆடி ரன் சேர்க்கத் தொடங்கினர்.
10.3 ஓவர்களில் ஸ்கோர் 80 ஆக இருந்தபோது ரெய்னா வெளியேறினார். அவர் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
தொடர்ந்து களம் கண்ட கேப்டன் தோனி 21 பந்துகளில் 29 ரன்கள் (1 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்து காலிஸ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மோர்கல் களம் இறங்கினார்.
சற்று நிதானமாவே ஆடி அரைசதம் அடித்த அனிருத், கடைசி ஓவரின் 2-வது பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டைரிஸ் ஒரு பவுண்டரியை விளாசி தனது பங்குக்கு 5 ரன்கள் எடுத்தார். மோர்கல் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.
வெற்றியைக் கோட்டை விட்ட கொல்கத்தா
அடுத்து ஆடிய கொல்கத்தா அணியில் பிஸ்லா, காலிஸ் ஆகியோர்சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பிஸ்லா 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். காலிஸ் 42 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதான் 11 ரன்களிலும், ஐபிஎல்-லில் மிக அதிகபட்சமாக ரு.11 கோடிக்கு மேல் விலைகொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட கேப்டன் கம்பீர் 1 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அதிரடியாக ஆடிய மனோஜ் திவாரி சென்னை அணியின் வெற்றியைத் தடுக்கும் அளவு அடித்து ஆட ஆரம்பித்தார். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. திவாரி 15 பந்துகளில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவர் த்ரில்...
கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை டிம் சேதி வெகு சிறப்பாக வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்த பந்தில் சுக்லா அவுட் ஆனார்.
இதனால் 4 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டன. இதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.
இதனால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பந்தில் ஒரு ரன்னே எடுக்கப்பட்டது. இதனால் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் எடுத்த எடுப்பிலேயே வெற்றியை ருசித்தது. 2 புள்ளிகளையும் பெற்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications