சிஎஸ்கே-வின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.. எந்த அணியும் தொட முடியாத சாதனையுடன் சரிவை சந்தித்த சிஎஸ்கே
சென்னை: ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விரும்பத்தகாத புதிய வரலாறு நிகழ்ந்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், இடையே இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், பங்கேற்ற பெரும்பாலான தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது.
குறிப்பாக, 2008 முதல் 2015 வரை தொடர்ந்து எட்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றிருந்தது. தடைக்கு பிறகு மீண்டும் வந்து 2018, 2019 ஆண்டுகளிலும் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது. இதனால், சிஎஸ்கே அணி தான் விளையாடிய முதல் 10 தொடர்களிலுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்திருந்தது.

அதற்குப் பிறகு 2020, 2022, 2024 ஆகிய மூன்று ஆண்டுகளில் சிஎஸ்கேவால் பிளே ஆஃப் செல்ல முடியவில்லை. இருப்பினும், ஒரு வருடம் தவறவிட்டால் அடுத்த வருடமே வலுவாக திரும்பி 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றது.
இந்த நிலையில், தற்போது முதல்முறையாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே, தற்போது 2025 ஆம் ஆண்டில் விளையாடியுள்ள 10 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் பரிதாப நிலையில் உள்ளது. இதனால், 2025 சீசனிலும் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு தகர்ந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இழந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருவதால், சிஎஸ்கேவின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தோனிக்கு தற்போது 43 வயதாவதும், அணியில் சில மூத்த வீரர்கள் இருப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இனி சிஎஸ்கே அணியில் இளம் ரத்தத்தை பாய்ச்சினால் தான் அடுத்த ஆண்டுகளில் வெற்றி பெற முடியும் என்பதால், இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதும் சிஎஸ்கே அணியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான ஆரம்பமாகவும் பார்க்கப்படுகிறது.
அனுபவ வீரர்களை மட்டுமே வைத்து வெற்றி பெறும் சிஎஸ்கேவின் பழைய வியூகம் இனி செல்லுபடியாகாது என்பதையே இந்த தொடர் தோல்விகள் காட்டுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். டி20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியில் இது ஒரு தவிர்க்க முடியாத மாற்றமாக இது உள்ளது.


Click it and Unblock the Notifications