சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அல்லது கே எல் ராகுலை வாங்க முயற்சி செய்யும் என்ற தகவல் சில நாட்களாக இணைய தளங்களில் வெளியாகி வந்தன. சிஎஸ்கே அணியும் அந்த மனநிலையில் இருந்தாலும் ஐபிஎல் விதியால் அது சாத்தியமில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பதிரானா மற்றும் தோனி ஆகிய ஐந்து வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது. அவர்களுக்கு சம்பளமாக 65 கோடி அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு அணி அதிகபட்சமாக 120 கோடி வரை மட்டுமே தங்கள் அணியின் வீரர்களுக்கு சம்பளமாக பயன்படுத்த முடியும் என்ற ஐபிஎல் விதி உள்ளது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதில் 55 கோடி மட்டுமே மீதம் உள்ளது. இந்த 55 கோடியை வைத்து தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் தங்கள் அணிக்கு தேவையான மற்ற வீரர்களை வாங்க வேண்டும்.
குறைந்தது 13 வீரர்கள் முதல் அதிகபட்சம் 20 வீரர்கள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் சிஎஸ்கே அணியால் எந்த ஒரு வீரருக்கும் ஏலத்தில் அதிக தொகை கேட்க முடியாது. இந்த நிலையில் தான் தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக செயல்பட ரிஷப் பண்ட்டை வாங்க சிஎஸ்கே அணி முயல்வதாக செய்திகள் வெளியாகின.
ஒரு வேளை ரிஷப் பண்ட்டை வாங்க முடியவில்லை என்றால் கே எல் ராகுலை சிஎஸ்கே அணி வாங்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இது சாத்தியம் இல்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். ரிஷப் பண்ட் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டால் நிச்சயம் அவருக்கு 15 கோடிக்கும் அதிகமான தொகை கேட்கப்படும். கே எல் ராகுல் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டால் அவருக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஒரு வீரருக்கு மட்டுமே அத்தனை தொகையை சிஎஸ்கே அணியால் ஒதுக்க முடியாது. அப்படி செய்தால் மீதமுள்ள வீரர்களை வாங்குவதில் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் எழும். எனவே, ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுலை சிஎஸ்கே அணி வாங்காது என விமர்சகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.