சென்னை டெஸ்ட்: கருணை காட்டாத கருண் நாயர்.. இந்தியா 282 ரன் முன்னிலை! டிரா செய்ய போராடும் இங்கிலாந்து
சென்னை: கருண் நாயர் விளாசிய முச்சதம் உதவியுடன் இந்திய அணி சென்னை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்தியா-இங்கிலாந்து நடுவேயான 5வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 16ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்களை குவித்தது.

முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3வது நாள் ஆட்ட நேர இறுதியான நேற்று, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்களை குவித்தது. லோகேஷ் ராகுல் 199 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 71 ரன்களுடனும், முரளி விஜய் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்ததாக அறிவித்தது.
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இது 282 ரன்கள் முன்னிலையாகும். கருண் நாயர் அசத்தலாக 303 ரன்கள் எடுத்து நாட்-அவுட்டாக நின்றார். அஸ்வின் 67, ரவீந்திர ஜடேஜா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். உமேஷ் யாதவ் 1 ரன்னுடன் களத்தில் நின்றார்.
இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கியது இங்கிலாந்து. ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்திருந்தது. குக் 3 ரன்களுடனும், ஜென்னிங்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் நின்றனர். நாளை ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் டிரா செய்யவே இங்கிலாந்து போராடி வருகிறது. இதையும் மீறி இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுள்ளதால் சென்னை டெஸ்ட் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications