ஆலுர் : சென்னையை சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் தற்போது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணியுடன் இணைந்து இருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்கள் முன்பு வரை ஸ்விக்கி டெலிவரி பாயாக வேலை செய்து வந்த அவருக்கு இந்த அதிர்ஷ்டம் எப்படி அடித்தது? என பலரும் அவரை வியப்புடன் பார்த்து வருகிறார்கள்.

பயிற்சி செய்ய பவுலர்கள் தேவை : 2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது நெதர்லாந்து அணி. அந்த அணி இந்திய சூழ்நிலையில் பயிற்சி செய்ய சில வாரம் முன்னதாகவே இந்தியா வந்தது. வலைப் பயிற்சியில் ஈடுபட தங்களுக்கு சில பந்துவீச்சாளர்கள் தேவை என சில நாட்கள் முன்பு விளம்பரம் செய்தது.
சைனாமேன் பவுலர் : இதை அடுத்து சுமார் 10,000 பேர் இந்தியா முழுவதிலும் இருந்து தங்கள் பந்துவீச்சு வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளனர். அதில் சென்னையை சேர்ந்த லோகேஷ் குமார் என்ற இளைஞரும் ஒருவர். அவர் தமிழக அளவில் ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர். அவர் தனது சைனாமேன் ஸ்பின் பந்துவீச்சை வீடியோவாக பதிவு செய்து அனுப்பி இருக்கிறார். .
நெதர்லாந்து அணியில் : இந்தியாவில் அதிக சைனாமேன் பவுலர்கள் இல்லை என்பதால் லோகேஷ் குமார் எளிதாக நெதர்லாந்து அணியை ஈர்த்து இருக்கிறார். அதை அடுத்து அவருக்கு நெதர்லாந்து அணியின் பயிற்சியில் பந்து வீச வாய்ப்பு கிடைத்துள்ளது. நெட் பவுலராக அவர்களுடன் அடுத்த இரண்டு மாதங்கள் அவர் பயணம் செய்ய இருக்கிறார்.
ஸ்விக்கியில் வேலை : முன்னதாக தமிழக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும், வருமானத்திற்கு ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார் லோகேஷ். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே வேலையில் இருந்து கொண்டே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்திருக்கிறார்.
செம மகிழ்ச்சி : மாநில அளவில் முன்னேறவே சிரமப்பட்ட லோகேஷ், தற்போது நெதர்லாந்து தேசிய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடப்போவதை எண்ணி மகிழ்ச்சியில் இருக்கிறார். கடைசியாக தன் திறமை அங்கீகரிக்கப்பட்டு இருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறி இருக்கிறார்.