5வது முறையாக வொர்க் அவுட்டான அந்த ராசி..!! திண்டுக்கல்லை சாய்த்து பைனலுக்குள் நுழைந்த சேப்பாக்..!!
நெல்லை: டிஎன்பிஎல் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர் 1 ஆட்டம் நெல்லையில் நடை பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
கங்கா ஸ்ரீதர் ராஜூ சிறப்பாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களம் இறங்கியது.

தொடக்கம் நிதானம்
அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் விக்கெட்டை காப்பாற்றி நிதானமாகவே விளையாடினர். ஸ்கோர் 8.5 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.

திணறிய திண்டுக்கல்
ஜெகதீசன் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் வெளியேறிய கொஞ்ச நேரத்தில் ஹரி நிஷாந்தும் 32 பந்தில் 29 ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த விவேக், சதுர்வேத் ரன் அவுட் ஆக, திண்டுக்கல் திணறியது.

சேப்பாக் வெற்றி
வெற்றிக்கான ரன்களை எடுப்பதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தடுமாற, டார் கெட்டை எட்ட முடியவில்லை. முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே எடுக்க முடிந்தது. அதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ராசி தொடர்ந்தது
மெதுவான தன்மை கொண்ட நெல்லை ஆடுகளத்தில் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். தவிர சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த மைதானத்தில் இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் வாகை சூடியிருக்கிறது. அந்த ராசி இந்த ஆட்டத்திலும் தொடர்ந்திருக்கிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கில்லீஸ் வென்று இறுதி போட்டிக்குள் முன்னேறி இருக்கிறது.

மற்றொரு வாய்ப்பு
தோல்வியை சந்தித்த திண்டுக்கல் டிராகன்சுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப் படும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2வது தகுதி சுற்றில் அந்த அணி மோத வேண்டும்.


Click it and Unblock the Notifications