பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்..! அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..!
Recommended Video
நெல்லை: ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தி இருக்கிறது.
டிஎன்பிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில், நெல்லையில் தொடங்கிய போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் மோதின. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது. இதையடுத்து, சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கவுசிக் காந்தியும், கங்கா ஸ்ரீதர் ராஜூவும் வந்தனர்.
தொடக்கமே சேப்பாக்கத்துக்கு அதிர்ச்சி. ஒரு ரன்னில் வெளியேறினார் கவுசிக் காந்தி. இதையடுத்து, 2வது விக்கெட்டுக்கு கோபிநாத் வந்தார். ஸ்ரீதர் ராஜூவும், கோபிநாத்தும் மெதுவாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். யாரும் எதிர்பாராத வகையில் கோபி நாத்தும், கங்கா ஸ்ரீதர் ராஜூம் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

கை கோர்த்தனர்
2 விக்கெட்டுகள் சீக்கிரமாக விழுந்ததால் தடுமாறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். உதிரசாமி 12 ரன்களில் வெளியேற, அஸ்வினும், ஹரிஷ் குமாரும் இணைந்தனர். அவர்களில் ஹரீஷ் குமார், திருச்சி வாரியர்ஸ் பந்துகளை சிதறடித்தார். அவர் 4 சிக்சர்களை அதிரடியாக விளாசினார்.

148 ரன்கள் எடுத்தது
19வது ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சித்த அவர் கேட்சாகி வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சேப்பாக் கில்லீஸ் இறுதிக்கட்டத்தில் தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விக். சரிவு
இதையடுத்து களம் இறங்கிய ரூபி திருச்சி அணிக்கு பெரிய ஏமாற்றம் தான் காத்திருந்தது. தொடக்க வீரர் அர்விந்த 9 ரன்களில் ஆட்டமிழந்து விக்கெட் சரிவை ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு அணியின் நிலைமை கலவரம் ஆனது.

ஒற்றை இலக்க ரன்கள்
ஆதித்யா பாரூ மட்டும் ஓரளவு ஆடி 29 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த படியாக, மணி பாரதியும், சரவணன் குமாரும் ஓரளவு ரன் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

சேப்பாக் வெற்றி
அபாரமாக பந்துவீசிய அலெக்சாண்டர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் முதல் முறையாக 5 விக்.எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். முடிவில், 20 ஓவர்களில் 107/9 ரன்களே திருச்சியால் எடுக்க முடிய, 41 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.


Click it and Unblock the Notifications