சேத்தன் சர்மாவிடம் இருந்து பறந்த ராஜினாமா கடிதம்.. ஜெய் ஷா யோசிக்காமல் எடுத்த முடிவு.. அநீதி நடந்ததா
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நடக்கும் பிரச்சினைகளை பொதுவெளியில் கூறியிருந்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெய் ஷாவே தலையிட்டுள்ளார்.
இந்திய கிரிகெட்டில் கடந்த 2 நாட்களாக சேத்தன் சர்மா என்ற பெயர் தான் சூறாவளியை கிளப்பிவிட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் உளறியுள்ளார்.
கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு எதிராக பல பிசிசிஐ அதிகாரிகள் செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை விட ஒருபடி மேலே சென்று இந்திய வீரர்கள் ஊக்கமருந்தை பயன்படுத்தி வாய்ப்பு பெறுவதாக பரபரப்பு தகவலை கூறியிருந்தனர்.

சேத்தன் சர்மா பேச்சு
சேத்தன் சர்மாவின் வீடியோவால் அதிர்ச்சியில் உறைந்திருந்த பிசிசிஐ அலுவலகம், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தேர்வுக்குழு அதிகாரிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் பிசிசிஐ-ன் உள் விவகாரங்களை மீடியாக்களில் பேசுவதற்கு அனுமதி கிடையாது எனக்கூறப்படுகிறது. எனவே விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது ஜெய் ஷா நடவடிக்கை எடுப்பார் எனக்கூறப்பட்டது.

பதவி விலகல்
இந்நிலையில் திடீர் திருப்பமாக சேத்தன் சர்மாவே தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு ராஜினாமா கடிதத்தை சேத்தன் அனுப்பியிருக்கிறார். ஜெய் ஷா உடனடியாக அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

விசாரணை
சேத்தன் சர்மாவுக்கு விசாரணை கமிஷன் ஒன்று அமைத்து, அவர் தரப்பு நியாயங்களை கூற வைக்க வேண்டும் என பலரும் கோரி வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் வழியே இல்லாத வகையில் அவரே பதவி விலகிவிட்டார். எனினும் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ அறிக்கை விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸி, தொடர்
டி20 உலகக்கோப்பை தொடரின் தோல்விக்கு பிறகு ஒட்டுமொத்த தேர்வுக்குழுவும் பணி நீக்கம் செய்யப்பட்ட போது சேத்தன் சர்மா மட்டும் மீண்டும் சேர்க்கப்பட்டார். அவரின் தலைமையில் தான் தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. எனினும் இன்னும் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications