“ரோகித் - கோலி இடையே ஈகோ மோதல் இருக்கு”.. இந்திய அணியில் நடப்பது என்ன?.. சேத்தன் சர்மா பரபர தகவல்!
மும்பை: இந்திய அணியில் ரோகித் சர்மா - விராட் கோலி இடையே பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருவதாக சர்ச்சைகள் இருந்த வந்த சூழலில் அதில் உள்ள உண்மை என்னவென்பதை தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உடைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் தோல்விக்காக தேர்வுக்குழுவை பிசிசிஐ அதிரடியாக நீக்கிய சூழலில் சேத்தன் சர்மா மட்டும் மீண்டும் தலைவர் பதவிக்காக கொண்டு வரப்பட்டார். அப்போது பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும் எழுந்திருந்தன.
இப்படி இருக்கையில் இன்று மற்றொரு பூகம்பம் வெடித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் சேத்தன் சர்மா கூறிய உண்மைகள் ரகசிய கேமிரா மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

கேப்டன்சி பிரச்சினை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் வெடித்து வருகின்றன. சவுரவ் கங்குலி தலைமையில் இயங்கிய பிசிசிஐ நிர்வாகத்திற்கும், கோலிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்ததாக கூறியிருந்தனர்.

ரோகித் மீது விமர்சனம்
மற்றொரு புறம் ரோகித் சர்மாவின் தூண்டுதல் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதாவது ஐபிஎல்-ல் ரோகித் சர்மா சிறப்பான கேப்டன்சி செய்ததை வைத்து பிசிசிஐ-ல் அதிகாரத்தை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் இருந்தன. இன்று வரை இந்திய அணியில் ரோகித் சர்மா - விராட் கோலி இடையே சரியான உறவு இல்லை எனவும் அவ்வப்போது தகவல் வெளியாகின்றன.

சேத்தன் சர்மாவின் கருத்து
இந்நிலையில் சேத்தன் சர்மாவின் பேச்சுக்கள் இதற்கு முடிவு கட்டியுள்ளது. அதில், ரோகித் சர்மா - விராட் கோலி இடையே எந்தவிதமான சண்டையும் கிடையவே கிடையாது. சொல்லப்போனால் இருவரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா போன்று நெருக்கமாக தான் உள்ளனர். இருவருக்கும் இடையே அவ்வபோது ஈகோ மோதல் மட்டுமே இருக்கிறது. அதனால் தான் இரு குழுக்களாக அவ்வபோது தெரிகிறது.

எதிராக செயல்படவில்லை
கேப்டன்சி விவகாரத்தில் நாங்கள் ரோகித்திற்கு ஆதரவாக செயல்படவில்லை. விராட் கோலிக்கு எதிராக செயல்பட நினைத்தோம் எனக்கூறலாம். சவுரவ் கங்குலிக்கு விராட் கோலியை எப்போதுமே பிடிக்காது. இதனால் கோலியின் மோசமான ஃபார்மை பயன்படுத்தி அவரை பதவியில் இருந்து நீக்கினோம். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு தனித்தனி கேப்டன் இருப்பது சரியாக இருக்காது என நினைத்து இந்த முடிவை எடுத்தோம் என சேத்தன் சர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications