மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தூண்களாகக் கருதப்பட்ட சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சில வாரங்களில் துவங்க உள்ள துலீப் டிராபி தொடருக்கான மேற்கு மண்டல அணியில் இருந்து புஜாரா மற்றும் ரஹானே இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு அவர்கள் திரும்புவதற்கான வாய்ப்புகள் முடிவுக்கு வருவதை உணர்த்துகிறது.
இந்தியாவின் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டியான துலீப் டிராபி 2025, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. இதற்கான மேற்கு மண்டல அணி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. மும்பை, மகாராஷ்டிரா, விதர்பா, குஜராத், பரோடா மற்றும் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கங்களின் வீரர்களை உள்ளடக்கிய இந்த அணிக்கு, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகப் பல ஆண்டுகளாக வலம் வந்த புஜாரா மற்றும் ரஹானே, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளனர். கடைசியாக 2023-ல் இந்திய அணிக்காக விளையாடிய இவர்கள், கடந்த ஆண்டும் துலீப் டிராபி அணியில் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது மீண்டும் ஒருமுறை துலீப் டிராபி அணியில் புறக்கணிக்கப்பட்டது, அவர்களது இந்திய அணி கனவை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அவர்கள் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது என்பதையே இந்த தேர்வு சுட்டிக் காட்டி இருக்கிறது.
புஜாரா, ரஹானே நீக்கப்பட்டாலும், மேற்கு மண்டல அணி நட்சத்திர வீரர்களுக்குப் பஞ்சமில்லாமல் வலுவாகவே காணப்படுகிறது. இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் முனைப்பில் இந்தத் தொடரில் களமிறங்குகின்றனர். குறிப்பாக, இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள்.
துலீப் டிராபி தொடரில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. காலிறுதிப் போட்டிகளில், வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலத்தையும், மத்திய மண்டலம், வடகிழக்கு மண்டலத்தையும் எதிர்கொள்கின்றன.
மேற்கு மண்டல அணி: ஷர்துல் தாக்கூர் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆர்யா தேசாய், ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், ஜெயமீத் படேல், மனன் ஹிங்ராஜியா, சௌரப் நவாலே (விக்கெட் கீப்பர்), ஷம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், தர்மேந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, அர்சன் நாக்வஸ்வாலா.