“தம்பி இது பாக்ஸிங் இல்லை.. நீங்க பண்ணது குழந்தைத்தனமான செயல்”.. வெளுத்து வாங்கிய புஜாரா, சபா கரீம்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அசிதா பெர்னாண்டோவுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் செயலை நியாயப்படுத்த முடியாது என்று செதேஸ்வர் புஜாரா மற்றும் சபா கரீம் போன்ற முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கொழும்பு டெஸ்டின் முதல் நாளில், அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அவுட்டாகி வெளியேறிய ஜெய்ஸ்வாலை நோக்கி பெர்னாண்டோ சில வார்த்தைகளைக் கூற, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஜெய்ஸ்வால் திரும்பி வந்து அவருடன் மோதினார். இருவரும் ஒருவரையொருவர் தலையால் முட்டிக்கொள்ளும் அளவுக்குச் சென்ற இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்காக இரு வீரர்களுக்கும் தங்களது போட்டி ஊதியத்திலிருந்து தலா 25 சதவீத அபராதமும், 1 டீமெரிட் புள்ளியும் தண்டனை விதித்துள்ளது ஐசிசி.

இந்த சம்பவம் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்த ஜெய்ஸ்வால், "அவர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியாது. எல்லை மீறினால் புதிய இந்தியா எப்போதும் தகுந்த பதிலடி கொடுக்கும்" என்று தனது செயலை நியாயப்படுத்தினார். ஆனால், அவரது இந்த விளக்கத்தை முன்னாள் வீரர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பேசிய செதேஸ்வர் புஜாரா, "மைதானத்தில் இது போன்ற காட்சிகள் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. ஒரு வீரராக நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதம் வரை பேசுவது பரவாயில்லை, ஆனால் மைதானத்தில் உடல்ரீதியான தொடுதல் அல்லது மோதல் என்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் தேர்வாளர் சபா கரீம் பேசுகையில், "இது ஒன்றும் குத்துச்சண்டை போன்ற உடல்ரீதியான விளையாட்டு அல்ல, இது கிரிக்கெட் என்பதை இருவருக்கும் யாராவது நினைவூட்ட வேண்டும். இது மிகவும் குழந்தைத்தனமான செயல். மைதானத்தில் இது போன்ற செயல்கள் தேவையில்லை. வீரர்கள் அனைவரும் இந்த அழகான விளையாட்டின் பிராண்ட் அம்பாசிடர்களாகச் செயல்பட வேண்டும். பல லட்சம் இளம் சிறுவர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறக்கக் கூடாது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் கூறுகையில், "முதல் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆன ஜெய்ஸ்வால், இந்த போட்டியிலும் நல்ல தொடக்கம் கிடைத்தும் 45 ரன்களில் அவுட் ஆனதால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் விரக்தி தான் இத்தகைய கோபமாக வெளிப்பட்டுள்ளது. எனவே, அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
