நீண்ட நாள் காத்திருப்பு...சொந்த ஊர் அணி கூட ஒதுக்கியது..வருத்தப்பட்ட புஜாரா...வாய்ப்பளிப்பாரா தோனி?
மும்பை: சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள புஜாரா, தனது சொந்த ஊருக்காக கூட ஆட முடியவில்லை என வருத்தப்பட்டுள்ளார்.
ஐபிஎல்-ல் பல வருடங்களாக எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாமல் இருந்த புஜாரா, இந்தாண்டு சி.எஸ்.கேவால் வாங்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இத்தனை வருடங்களில் தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து புஜாரா மனம் உருகியுள்ளார்.

சி.எஸ்.கே
ஐபிஎல்-ல் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி, கடந்த சீசனில் படுதோல்வியை சந்தித்தது. எனவே வரும் 9ம் தேதி தொடங்கவிருக்கும் 14வது ஐபிஎல்-ல் சிறப்பாக செயல்பட வேண்டும் என பல புதிய வீரர்களை களமிறக்கியுள்ளது. அதில் அனுபவ வீரர் சட்டீஸ்வர் புஜாராவும் ஒருவர். இவரை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு அந்த அணி ஏலம் எடுத்துள்ளது.

அணிகள்
கடந்த 2010ம் ஆண்டு முதன் முதலில் கொல்கத்தா அணியில் புஜாரா ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2011 முதல் 2013 வரை 3 சீசன்களில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். பின்னர் 2014ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக பங்கேற்றார். இதுவே இவர் கடைசியாக பங்கேற்ற ஐபிஎல் ஆகும். இதன் பின்னர் எந்த அணியும் இவரை ஏலம் எடுக்கவில்லை. ஐபிஎல்-ல் இதுவரை இவர் 30 போட்டிகளில் 390 ரன்களை எடுத்துள்ளார்.

இடைபட்ட காலம்
இடையில் கடந்த 2016 & 2017ம் ஆண்டு புஜாராவின் சொந்த மாநிலமான குஜராத்தை மையமாக கொண்டு குஜராத் லையன்ஸ் அணி கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த 2 ஆண்டுகளில் அந்த அணியாலும் புஜாரா ஏலம் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தற்போது பேசியுள்ள அவர், நான் சொந்த ஊருக்காக கூட ஏலம் எடுக்கப்படவில்லை என்பது வருத்தம் தந்தது. என்னை ஏலம் எடுத்திருந்தால் சிறப்பாக ஆடியிருப்பேன். ஆனால் தற்போது அவையெல்லாம் முடிந்துவிட்டது. நான் அதை கடந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

நியாபகம் இருக்கிறதா
புஜாராவிடம், அவர் கடைசியாக விளையாடிய ஐபிஎல் போட்டி நியாபகம் உள்ளதா எனக்கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அது நீண்ட வருடத்திற்கு முன்பு நடந்தது. கடந்த 2014ம் ஆண்டு என நினைக்கிறேன். மும்பை அணிக்கு எதிராக ஆடினேன். ஐபிஎல் தொடர் உலகின் சிறந்த தொடராகும். ஆனால் அதை பல வருடங்கள் மிஸ் செய்துவிட்டேன் என வருத்ததுடன் தெரிவித்தார். இவர் கம்பேக் கொடுக்க சி.எஸ்.கே அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications