“அஸ்வினுக்கு விக்கெட் விழவில்லை என்றால் தொப்பியை..”.. ரகசியத்தை உடைத்த செதேஸ்வர் புஜாரா
மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான செதேஸ்வர் புஜாரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இணைந்து பல வரலாற்று வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளனர். இந்த நிலையில், அஸ்வின் விக்கெட் வீழ்த்த கடைப்பிடித்த ஒரு சுவாரஸ்யமான மூடநம்பிக்கை பழக்கத்தை புஜாரா தற்போதைய இலங்கை டெஸ்ட் போட்டியின் போது வெளிப்படுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டில் பல ஜாம்பவான் வீரர்கள் சில வினோதமான மூட நம்பிக்கைளை கொண்டு இருந்ததை நாம் கேட்டு இருப்போம். போட்டியின் போது ஓய்வறையில் அசையாமல் இருப்பது, குளியல் அறைக்கு சென்று இருக்கும் போது களத்தில் பேட்டிங் செய்யும் சக வீரர் பவுண்டரி அடித்தால் அங்கேயே இருப்பது என பல சுவாரசிய சம்பவங்களை கேட்டு இருப்போம். ஆனால், அஸ்வின் ஆடுகளத்திலேயே ஒரு வித்தியாசமான மூட நம்பிக்கையை கொண்டு இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

இது பற்றி புஜாரா பேசுகையில், "மைதானத்தில் அஸ்வின் என்னை எப்போதும் ஒரு ராசியான நபராகவே கருதினார். அவர் பந்துவீச வரும் போது, அவரின் தொப்பியை என்னிடம் கொடுத்து அம்பயரிடம் வழங்கச் சொல்வார். மைதானத்தில் விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும் போதெல்லாம் என்னைத்தான் தேடுவார். நான் அவரது தொப்பியை வாங்கி அம்பயரிடம் கொடுத்தால், அவருக்கு விக்கெட் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருந்தது" என்று சுவாரஸ்யமான ரகசியத்தை உடைத்தார்.
சமூக வலைதளங்களில் புஜாராவின் இந்தத் தகவல் பரவியதை அடுத்து, அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிரிப்பது போன்ற எமோஜிகளைப் பதிவிட்டு தனது ரியாக்ஷனைக் காட்டியுள்ளார். அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாராவுக்கு 2023க்கு பிறகு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அஸ்வின் 2025 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற்றார். இவர்கள் இருவரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வு கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் துவங்கி ஒரே நேரத்தில் முடிவுக்கும் வந்தது.


Click it and Unblock the Notifications
