
ராயல் கோப்பை தொடர்
புஜாரா ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் ஒன்பது போட்டிகளில் விளையாடினார். இதில் மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும். சராசரி 90, ஸ்ட்ரைக் ரேட் 112 என்றும் மிரட்டலாக இருந்தது. புஜாரா ஒட்டுமொத்தமாக 107 ரன்கள் ,174 ரன்கள் ,49 ரன்கள் ,66 ரன்கள், 132 ரன்கள் என 624 ரன்கள் குவித்தார். குறிப்பாக அந்தத் தொடரில் புஜாரா டி20 களில் பேட்ஸ்மேன்கள் விளையாடுவது போல் அதிரடியை காட்டினார்.

இன்னொரு முகம்
இதனை பார்த்து ரசிகர்கள் புஜாராவா இப்படி விளையாடுகிறார் என்று மிரண்டு போயிருந்தனர். இந்த நிலையில் தனது அதிரடி மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புஜாரா, என்னுடைய விளையாட்டில் இன்னொரு முகம் இருக்கிறது. அது பற்றி சந்தேகமே தேவையில்லை. ஆனால் இங்கிலாந்தில் ஆடுகளம் சிறப்பாக இருந்தது. ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்தது.

சிஎஸ்கே காரணம்
இருப்பினும் நீங்கள் அதிரடியாக ஆட வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே உங்களால் அங்கு ரன் குவிக்க முடியும். சமீபகாலமாக இதில் நான் பயிற்சி மேற்கொண்டேன். சிஎஸ்கே அணியில் நான் இருந்தபோது எனக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை. அப்போது மற்ற வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது எனக்குள்ளே நான் கூறிக் கொண்டது, நான் டி20 , ஒருநாள் தொடர்களில் விளையாட வேண்டும் என்றால் எனது விக்கெட்டுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து ஆட வேண்டும்.

சிறப்பு பயிற்சி
ஷாட்களை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும். ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடர்க்கு முன்பு பயிற்சியாளர் கிராண்டிடம் நான் சிறப்பு பயிற்சி மேற்கொண்டேன். அப்போது சில ஷாட்டுகள் ஆடுவது குறித்து பயிற்சி மேற்கொண்டேன். அப்போது அவர்தான் நான் அதிரடியாக ஆடுகிறேன் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். இதனால் இந்த பெரிய ஷாட்டுகளை போட்டியில் நான் பயன்படுத்தினால் ஒரு நாள் தொடர்களிலும் நான் ரன குவிப்பேன் என்று நம்பினேன்.

ஒருநாள் அணியில் புஜாரா?
புஜாரா பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் இருந்தாலும் அவர் வெறும் 30 ஐபிஎல் போட்டிகள் தான் விளையாடி இருக்கிறார். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற புஜாரா ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் அதே புஜாரா ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் 131 பந்துகளில் 174 ரன்கள் விளாசினார். இதைப் போன்று மற்றொரு ஆட்டத்தில் ஒரே ஓவரில் 22 ரன்கள் குவித்தார். இதன் மூலம் புஜாரா எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்று தேர்வு குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications