பெங்களூரு: துலீப் டிராபி தொடரில் மேற்கு மண்டல அணிக்காக ஆடி வரும் நட்சத்திர வீரர் புஜாரா தனி வீரராக போராடி சதம் விளாசி அசத்தியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி திணறி வருவதாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, புஜாரா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேச தொடங்கினர்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் புஜாராவுக்கான இந்திய அணியின் கதவுகள் மூடப்படவில்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது. இதன் காரணமாக துலீப் டிராபி தொடரில் விளையாட புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.
ஷிவம் மாவி தலைமையிலான மத்திய மண்டல அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வடக்கு மண்டல அணிக்காக புஜாரா களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் புஜாரா 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் புஜாரா மீதான விமர்சனங்கள் கூடுதலானது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய புஜாரா நேற்றைய ஆட்ட நேர முடிவில் அரைசதம் அடித்து களத்தில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், பொறுப்புடன் ஆடிய புஜாரா சதம் விளாசி அசத்தியுள்ளார். 266 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்து புஜாரா ஆடிய போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஜூன் 23ஆம் தேதி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா, ஜூலை 7ஆம் தேதி துலீப் டிராபி தொடரில் அசத்தலான சதத்தை விளாசி திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
மேற்கு மண்டல அணியில் பிரித்வி ஷா, பிரியங்க், சர்ஃபராஸ் கான் என்று நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் மட்டும் 52 ரன்கள் எடுத்து கம்பெனி கொடுத்தார். புஜாராவின் ஆட்டத்தால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. துலீப் டிராபி தொடரில் இமாலய சதம் ஒன்றை விளாசினால் மீண்டும் புஜாரா இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.