14 ரன்கள்.. இது ஒருத்தர் அடிச்ச ரன் இல்லை.. மொத்தமா ஒரு நாட்டின் டீம் அடிச்சது! எந்த நாடு தெரியுமா?
பாங்காக் : சீன மகளிர் அணி பரிதாபத்துக்குரிய வகையில் 189 ரன்கள் வித்தியாசத்தில் டி20 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான டி20 போட்டியில் சீன மகளிர் அணி பேட்டிங் செய்ய தடுமாறியது. சுமார் 7 வீராங்கனைகள் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
சீன ஆடவர் அணி கிரிக்கெட் அரங்கில் பலமுறை குறைந்த ரன்கள் எடுத்து வந்த நிலையில், அந்த நாட்டின் மகளிர் அணியும் குறைந்த ரன்கள் அடித்து பரிதாப சாதனை நிகழ்த்தி வருகிறது.

ஐக்கிய அரபு அணி 203 ரன்கள்
தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து மகளிர் டி20 ஸ்மாஷ் தொடரில் சீனா - ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஓசா 62 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார்.

14 ரன்கள் எடுத்த சீனா
அடுத்து ஆட வந்த சீன அணியில் ஒருவர் கூட பேட்டிங் செய்ய முடியாமல் தடுமாறினர். பத்து பந்துகளுக்கும் அதிகம் சந்தித்தவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. சீன அணி 10 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக 4 ரன்கள்
ஹான் லிலி "அதிகபட்சமாக" 4 ரன்கள் எடுத்தார். இருவர் தலா 3 ரன்களும், ஒருவர் 2 ரன்களும் எடுத்தனர். மற்ற ஏழு வீராங்கனைகள் டக் அவுட் ஆகினர். சீன அணியில் ஒருவருக்கு கூட பேட்டிங் செய்ய வராதது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

பெரிய தோல்வி இது தான்
ஐக்கிய அரபு அணியிடம் 189 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சீனா மகளிர் டி20யில் பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. முன்னதாக லியஸ்டோ அணி நமீபியா அணியிடம் அடைந்த 179 ரன்கள் தோல்வியை முறியடித்துள்ளது சீனா.

கிரிக்கெட் வளர்க்கும் மற்ற நாட்டினர்
கிரிக்கெட் போட்டிகளில் தற்போது ஓரளவு பெயர் சொல்லும் வகையில் ஆடும் சில புதிய நாடுகள் ஏற்கனவே, தீவிர கிரிக்கெட் ஆடும் 10 நாடுகளை சேர்ந்த சிலரை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்கின்றன. அதன் மூலம் தங்கள் நாட்டில் கிரிக்கெட்டை வளர்க்கிறார்கள்.

சீனர்கள் மட்டும்
இந்த போட்டியில் ஆடிய ஐக்கிய அரபு அணியில் இந்தியா மற்றும் இலங்கை நாட்டை பூர்விகமாக கொண்ட சில பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், சீன ஆடவர் மற்றும் மகளிர் அணி முழுமையாக சீனர்களை கொண்டே தங்கள் கிரிக்கெட் அணியை கட்டமைத்துள்ளது. இது தான் சீனா அணி கிரிக்கெட்டில் பின்தங்கி இருக்கக் காரணமோ? அல்லது கிரிக்கெட்டை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா?


Click it and Unblock the Notifications