பார்படோஸ்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 கிரிக்கெட்டில் ஒரு இமாலய மைல்கல்லை எட்டியுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், டி20 போட்டிகளில் 14,000 ரன்களைக் கடந்த உலகின் மூன்றாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான கிறிஸ் கெய்ல் மற்றும் கீரான் பொல்லார்ட் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்த நிலையில், தற்போது இந்த ஜாம்பவான் பட்டியலில் இணைந்துள்ளார் அலெக்ஸ் ஹேல்ஸ்.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்த, ஹேல்ஸுக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. போட்டியின் 9வது ஓவரின் கடைசிப் பந்தில், சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டு, மிகவும் ஸ்டைலாக இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஹேல்ஸ், வெறும் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 'யுனிவர்சல் பாஸ்' கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் 14,562 ரன்களுடன் முதலிடத்தில் அசைக்க முடியாதவராகத் திகழ்கிறார். நேற்றைய போட்டியின் மூலம், அலெக்ஸ் ஹேல்ஸ் 509 போட்டிகளில் 14,024 ரன்களுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் இந்த மைல்கல்லை எட்டிய கீரான் பொல்லார்ட், 713 போட்டிகளில் 14,012 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் ஆகியோர் உள்ளனர்.
36 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து அணிக்காக மட்டுமல்லாமல், ஐபிஎல், பிக் பேஷ், பிஎஸ்எல், சிபிஎல் என உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் பங்கேற்று ரன் மழை பொழிந்து வருகிறார். டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே பெரிதும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இங்கிலாந்திலிருந்து ஒரு வீரர் இந்த உயரத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.