மும்பை: வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான கிறிஸ் கெயில், இந்தியாவின் ஐபிஎல் தொடரில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியவர். 'யுனிவர்ஸ் பாஸ்' என்று செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெயில், சமீபத்தில் காஜியாபாத்தில் நடைபெற்ற புரோ கிரிக்கெட் லீக்கின் (PCL) இரண்டாவது சீசன் தொடக்க விழாவின் போது மைகேல் (myKhel) தளத்திற்குப் பேட்டியளித்தார்.
அப்போது, நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் அவரது அதிரடி ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் விளையாடி வரும் அபிஷேக் சர்மா மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரைப் பாராட்டிப் பேசினார். குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் தனது சக நாட்டவரான நிக்கோலஸ் பூரனை வெகுவாகப் பாராட்டினார்.
நிக்கோலஸ் பூரன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் 200 க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக ரன் குவித்து வருகிறார். அவரை "என் ஆள்" என குறிப்பிட்டு பாராட்டினார் கிறிஸ் கெயில். இருவரும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதோடு இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் கெயில் அளித்த பேட்டியிலிருந்து சில முக்கியப் பகுதிகள்:
கேள்வி: புரோ கிரிக்கெட் லீக்கின் இரண்டாவது சீசனில் இணைவது குறித்தும், இதில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தும்?
கிறிஸ் கெயில்: ஆம், நான் பிசிஎல் சீசன் இரண்டில் ஒரு லெஜண்டாக இணைகிறேன். ஆனால், ஏற்பாட்டாளர்களிடம் எனது ஒரே குறை - ஏன் என்னை முதல் சீசனுக்கே அழைக்கவில்லை? என்பதுதான். உண்மையாக சொல்வதானால், இது ஒரு சிறந்த முயற்சி. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களை தங்கள் லீக்குகளுக்குக் கொண்டு வருவது அருமையான விஷயம். எனக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து எனது செல்வத்தை எப்படிப் பெருக்குவது என்று கற்றுக்கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு. (என்று கூறி சிரித்தார் கிறிஸ் கெயில்.)
கேள்வி: 2025 ஐபிஎல் போட்டிகளைக் கவனித்து வருகிறீர்களா?
கிறிஸ் கெயில்: நான் இப்போதெல்லாம் அதிகமாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனால், ஸ்கோர் கார்டுகளைப் பார்த்து என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து வைத்து இருக்கிறேன். இத்தனை திறமையான வீரர்கள் ஐபிஎல் மேடையைப் பிரகாசிக்க வைப்பதைப் பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கேள்வி: சில நாட்களுக்கு முன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரன் சேஸிங் பற்றி உங்கள் கருத்து என்ன?
கிறிஸ் கெயில்: ஓ, அது ஒரு அற்புதமான சேஸிங்! அந்த இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களும் ஆடிய விதம் பிரமிக்க வைத்தது. ஒரு பெரிய இலக்கை எப்படி அச்சமின்றியும், உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்குக் காட்டினார்கள்.
கேள்வி: 2025 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில், அணிகள் 300 ரன்களைத் தாண்டும் என்று நிறைய பேச்சு அடிபட்டது. இந்த சீசனில் அதைப் பார்ப்போம் என்று நினைக்கிறீர்களா?
கிறிஸ் கெயில்: உண்மையைச் சொல்வதானால், ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் மட்டுமல்ல; விரைவில் ஒரு டி20 போட்டியில் தனிநபராக யாராவது 180 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் கூட அடிக்கலாம். நான் 2013 இல் ஆர்சிபி அணிக்காக 175 ரன்கள் அடித்தபோது, யாரும் அப்படி பேட்டிங் செய்யவில்லை. ஆனால் இப்போது? இந்த இளைஞர்கள் அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடுகிறார்கள். அவர்கள் பந்துவீச்சாளர்களைப் பார்த்து இனி பயப்படுவதில்லை. அந்த சாதனைகள் முறியடிக்கப்படுவது வெகு தொலைவில் இல்லை.
கேள்வி: அபிஷேக் சர்மா மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக அவர் அடித்த நம்பமுடியாத 141 ரன்கள் குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன?
கிறிஸ் கெயில்: நான் சொன்னது போல, இந்த இளம் இந்திய பேட்ஸ்மேன்களிடம் நிறைய திறமை உள்ளது. அபிஷேக் சர்மா (பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 141 ரன்கள் விளாசியதன் மூலம்) தன்னிடம் உள்ள திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தன்னம்பிக்கையுடனும், சக்தியுடனும், நீங்கள் பார்க்க விரும்பும் அந்த அச்சமற்ற மனநிலையுடனும் விளையாடுகிறார்.
கேள்வி: ஐபிஎல் 2025 இல், வெறித்தனமாக ஆடுவது போலவும், சிக்ஸர்களை சர்வ சாதாரணமாக அடிப்பது போலவும் விளையாடும் நிக்கோலஸ் பூரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கிறிஸ் கெயில்: நிக்கோலஸ் பூரன், என் ஆள், மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்; மேலும், என்னைப் போலவே அவரும் ஒரு இடது கை பேட்ஸ்மேன். கிரிக்கெட்டில் நாங்கள் இடது கை பேட்ஸ்மேன்கள் ஒரு தனித்துவமானவர்கள். இந்த ஆண்டு, பூரன் மிகவும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். ஐபிஎல் 2025 இல் அவரது மிகச் சிறந்த ஆட்டம் இன்னும் வரவில்லை. அவர் பந்தை மிக நேர்த்தியாக அடிப்பவர், பந்துவீச்சாளர்கள் நிச்சயமாக அவருக்குப் பந்துவீசப் பயப்படுகிறார்கள். அவர் ஐபிஎல்-லில் அதிரடி அரைசதங்களை அடிக்கிறார், இப்போது அவர் அந்த 50களை சதங்களாக மாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
கேள்வி: உங்களின் மற்ற முன்னாள் அணியான பஞ்சாப் கிங்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியில் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் சிறப்பாகச் செயல்படும் என்று நினைக்கிறீர்களா?
கிறிஸ் கெயில்: யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் இல்லாமல் பஞ்சாப் கிங்ஸ் எப்படி விளையாட முடியும்?. ஆனால், நகைச்சுவையைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த முறை அணி மிகவும் சமபலத்துடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தும் ஸ்ரேயாஸுக்குப் பாராட்டுக்கள். பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் கூட்டணி நன்றாகப் பொருந்திப் போயுள்ளது. அவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால், அவர்களது கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டு வரலாம்.
கேள்வி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை ஐபிஎல் 2025 கடினமாக அமைந்துள்ளது. சிலர் அவர்களின் பவர்-பிளே அணுகுமுறை காலாவதியானது என்று நம்புகிறார்கள். உங்கள் கருத்து?
கிறிஸ் கெயில்: ஆம், இந்த சீசனில் சிஎஸ்கே-வுக்குச் சரியாக அமையவில்லை. ஆனால், அவர்கள் ஐந்து முறை சாம்பியன்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் எம்எஸ் தோனி என இரண்டு கூர்மையான சிந்தனையாளர்கள் அவர்களிடம் உள்ளனர். ஒரு அணியை உருவாக்குவதிலும் மறுகட்டமைப்பதிலும் அந்த இருவரும் வல்லவர்கள். அவர்கள் மீண்டு வர ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.