வயிற்று உபாதை... தேறிய யூனிவர்ஸ் பாஸ்... ஆர்சிபியை ஒருகை பார்க்க தயார்
ஷார்ஜா : ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் வரும் வியாழக்கிழமை ஷார்ஜாவில் ஐபிஎல்லின் 31வது போட்டி நடைபெறவுள்ளது.
வயிற்று உபாதை காரணமாக கடந்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த கிறிஸ் கெயில் உடல்நிலை சரியாகியுள்ள காரணத்தால் இந்த போட்டியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6ல் தோற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

7 போட்டிகளில் 6ல் தோல்வி
ஐபிஎல் 2020 சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கேப்டன் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் போன்றவர்கள் உள்ள போதிலும் அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 6ல் தோல்வியடைந்துள்ளது.

உடல்நிலை தேறிய கெயில்
இந்நிலையில் வயிற்று உபாதை காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாமல் உள்ள அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தற்போது உடல்நிலை தேறியுள்ளதால் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பயிற்சிகளில் பங்கேற்பு
வயிற்று உபாதை காரணமாக கடந்த வாரத்தில் அவர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்திருந்த நிலையில், தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியிலும் கெயில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் உடல்நிலை தேறி கடந்த திங்கட்கிழமை பயிற்சிகள் அவர் பங்கேற்றார்.

போராடாமல் விட்டுத்தர மாட்டேன்
வரும் வியாழக்கிழமை ஆர்சிபிக்கு எதிரான முக்கிய போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதில் தற்போது கெயில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெயில் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். போராடாமல் தான் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் அதில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications